கோவையில் தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு

கோவையில், கோயம்புத்தூர்த் தமிழ்ச் சங்கமம், தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் சார்பில் தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது.

சங்ககாலம் முன்தொட்டு தமிழ்பெற்று இருந்த ஏற்றத்தை இழந்து இருக்கின்ற நிலையில் அந்த உரிமையை மீட்டு எடுப்பதற்கு உண்டான முயற்சிதான் இந்த மாநாட்டின் மைய நோக்கம். தற்போதைய இளைய தலைமுறையினரிடம் நமது சங்ககாலத் தமிழை கொண்டு சேர்ப்பது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ், வழிபாட்டு தலங்கள், சடங்குகள், வாழ்வில் சடங்குகளில் தமிழ், பள்ளி, கல்லூரி, நீதிமன்றங்கள் ஆகியவற்றில் தமிழையே பயன்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்றது.

விழாவில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தரும் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணியம் தனது வரவேற்பு உரையில் ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கான தீர்மானங்களை வாசித்தார்.

அதில் உலகத்தில் பலநாடுகளில் இருப்பது போலவும் இந்தியாவில் சில மாநிலங்களில் இருப்பது போலவும் பள்ளிக் கல்வி முழுவதும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் தாய் மொழியாகிய தமிழ்மொழி வாயிலாகவே கற்பிக்கப்படவேண்டும். மாநிலப் பாடத்திட்டம், தேசியப் பாடத்திட்டம், பன்னாட்டு பாடத்திட்டம் உட்பட தமிழ்நாட்டில் இயங்கிவரும் அனைத்துப் பாடத்திட்டப் பள்ளிகளிலும் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்களை அவர் வாசித்தார்.

மேலும் இந்தியாவின் பிற மாநிலங்கள் வாழ் தமிழர் நலப் பேரமைப்பும், அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து தமிழ்நாடு அரசுக்கு வெளிமாநில தமிழர்கள் சார்பாக சில வேண்டுகோளை முன்வைத்தன.

அதில், தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படும் மக்கள் நலத்திட்டங்கள், உயிர்காப்பீடுத் திட்டம் போன்றவற்றில் வெளிமாநிலத் தமிழர்களுக்கும் வாய்ப்பளிக்க செய்ய வேண்டும். மொழிச் சிறுபான்மையினருக்கான உரிமைகளை மீட்டெடுக்க தமிழ் நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாநாட்டில் முன்வைத்தனர்.

மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு பேசியதாவது: தமிழக முதல்வர் கடந்த 2021 மே மாதம் பதவி ஏற்றது முதல் தமிழுக்காக தனது குரலை எங்கு எல்லாம் அழுத்தமாக பதிய வேண்டுமோ அங்கேல்லாம் குரல் கொடுத்து வருகிறார். இந்த ஆண்டு தமிழ் வளர்ச்சிக்காக ரூபாய் 82 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கியது இந்த ஆண்டுதான்.

இந்த மாநாடு கோவையில் நடைபெறுவது பொருத்தமான ஒன்று. கோவை மண்னிற்கு என்று தனி சிறப்பு உண்டு. தமிழக மக்களுக்கு இப்போது நடைபெறும் ஆட்சியின் மீது நம்பிக்கை வந்துள்ளது. தனது குறைகளை முதலமைச்சரிடம் சொன்னால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இங்கு வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் முதலமைச்சரிடம் வழங்கப்படும். தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேசினார்.

இவ்விழாவில் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள், சென்னை, உயர்நீதி மன்றம் நீதியரசர், (ப.நி), கிருபாகரன், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராசு, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் செகநாதன், தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், தமிழ் மற்றும் கல்வித்துறை இயக்குனர்கள் மற்றும் அனைத்துநிலைத் தமிழ் அறிஞர்கள், சிற்பி பாலசுப்பிரமணிம், முன்னாள் மாவட்ட நீதிபதி ஜியாபுதின், கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்தலைவர் கவிதாசன், கோவை வேளாண்மைப்பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.