குமரகுரு நிறுவனங்கள் சார்பில் பிரம்மாண்டமான ‘தி ஆர்ப்’ அரங்கம் திறப்பு

குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் 75 வருட சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக ‘தி ஆர்ப்’ என்ற நினைவாலயம் கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த அரங்கை திறந்து வைத்தார். பரம்வீர் சக்ரா விருது பெற்ற சுபேதார் மேஜரும், கவுரவ கேப்டனுமான யோகேந்திர சிங் யாதவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை வழங்கினார். குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.

‘தி ஆர்ப்’ என்ற நினைவாலயம் 115 அடி உயர கொடிக்கம்பத்துடன் கூடிய வட்ட வடிவிலான மேடையும், 800 க்கும் மேற்பட்ட மக்கள் அமரும் வசதியுடன் அகண்ட திறந்தவெளி அரங்கத்தையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

திறந்தவெளி அரங்கில் திரைப்படங்கள், கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெறும். இது மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை வழங்கும் மையமாக அமைவதோடு, அவர்களுக்கு பயிற்சி மற்றும் விளையாட்டு திடலாகவும் திகழும்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கல்லூரி தாளாளர் பாலசுப்ரமணியம், இணை தாளாளர் சங்கர் வாணவராயர் ஆகியயோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.