பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியில் 34 வது பட்டமளிப்பு விழா

பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 34 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் நிகழ்வைத் துவக்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் பிருந்தா வரவேற்புரை வழங்கி ஆண்டறிக்கை வாசித்தார்.

பெங்களூரில் ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநராகப் பணியாற்றும் உபேந்திரகுமார்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

அவர் பேசுகையில்: இன்றைய இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தலைவர்களாகவும், அதைக் கட்டமைக்க வல்லமைப் படைத்தவர்களாகவும் விளங்குவார்கள். பல அறிவார்ந்த திறன் படைத்த ஆளுமைகளைக் கொண்ட இந்தியர்களின் கண்டுபிடிப்புகள் நாம் வாழும் உலகைக் கட்டமைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் நெருக்கடியான காலத்தையும் சவால்களையும் எவ்வாறு கையாள்வது என்பதைக் கொரோனா பெருந்தொற்று நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. அதுபோல இன்றைய சவால் நிறைந்த உலகில் நமது தேவைகளை எதிர்கொள்ள நேர்மறையான சிந்தனையையும் எண்ணத்தையும் பட்டதாரிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் சமூக அரசியல் மேம்பாட்டிற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அவர்கள் பாடுபட வேண்டும் என்றும் கூறினார்.

விப்ரோ நிறுவனத்தின் இந்திய அளவிலான கல்லூரி வளாகப் பணியமர்த்தல் பிரிவின் தலைவர் ராதிகா ரவி கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டு 117 முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

பட்டமளிப்பு விழாவில் 55 முனைவர் பட்டங்களும், 889 முதுநிலைப் பட்டங்களும், 2589 இளநிலைப் பட்டங்களும் வழங்கப்பட்டன.

இதில் பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் பல்வேறு ஆட்சிக்குழு உறுப்பினர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.