எடப்பாடி தொகுதியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினை தீர்க்கப்படும்

– முதல்வர் ஸ்டாலின் உறுதி

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள பிரச்சினைகளை பட்டியலிட்டு அனுப்பி வைத்தால், அது எடப்பாடி பழனிசாமி தொகுதியாக இருந்தாலும் அந்த பிரச்சினையை தீர்த்து வைப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொளவதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோவை வருகை புரிந்துள்ளார். முதல்வர் தலைமையில் நடைபெறும் இந்த திருமண விழாவில், மணமக்களுக்கு மாலைகளை எடுத்து கொடுத்து திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து மணக்களை வாழ்த்தி பேசினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்: தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் அத்தனையும் நிறைவேற்றியுள்ளோம் என கூறவில்லை, ஆனால் 70 % நிறைவேற்றி இருக்கின்றோம். மீதமுள்ள 30 சதவீதத்தையும் விரைவில் நிறைவேற்றுவோம். அதை மக்கள் எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

மனுக்களை கொடுக்கும் போது கூட மகிழ்ச்சியோடு, பூரிப்பொடு, நம்பிக்கையோடு கொடுக்கின்றனர். இது தான் திராவிட மாடல் ஆட்சி. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வந்த போது மனுக்களை பெற்றுக்கொண்டோம். ஆட்சிக்கு வந்த 100 நாளில் தீர்க்கப்படும் என உறுதியளித்தோம். இதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அப்படி பெறப்பட்ட மனுக்களில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டது.

எந்த பாகுபாடும் இன்றி 234 தொகுதிகளிலும் உள்ள பிரச்சினைகள் குறித்த தெரிவிக்கும்படி எம்.எல்.ஏ., களை கேட்டுக்கொள்கிறேன். அது எடப்பாடி தொகுதியாக இருந்தாலும் பிரச்சினை தீர்க்கப்படும்.

ஜெயலலிதா மறைவில் மர்மம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் சொன்னார். ஒப்புக்காக ஒரு கமிஷன் அமைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. திமுக ஆட்சி அமைத்தால் முறையாக விசாரித்து அறிக்கை பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தோம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை கொடுக்கப்பட்டது. அதில் பல பிரச்சினைகள் இருக்கிறது. அதை இப்போது சொல்ல மாட்டேன். சட்டமன்றத்தில் வைத்து அதில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதித்து அதை நிறைவேற்றுவோம்.

தூத்துக்குடி சம்பவம் தொடர்பான அறிக்கையும் வந்திருக்கின்றது. அதையும் சட்டமன்றத்தில் விவாதித்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

பெண்களுக்கு இலவச பேருந்து, பால்விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் டெல்லி முதல்வர் தலைமையில் துவங்கப்பட இருக்கின்றது. பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை நிதி நிலைமை சரியானவுடன் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த திருமண விழாவில், அமைச்சர்கள் பொன்முடி, ஏ.வ.வேலு, செந்தில்பாலாஜி, காந்தி, நாசர், வெள்ளகோவில் சாமிநாதன், இராமச்சந்திரன், கயல்விழி செல்வராஜ், எம்.பிக்கள் அந்தியூர் செல்வராஜ், கலாநிதி, முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், கொங்கு ஈஸ்வரன், டிஜிபி சைலேந்திரபாபு, லியோனி, மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து கொடிசியா அரங்கு வரை வழி நெடுங்கிலும் திமுகவினரும், பொதுமக்களும் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், காலை நேரம் அலுவலகத்திற்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.