கோவையில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு வாக்கத்தான்

பாரம்பரிய மற்றும் உகந்த உணவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் ‘உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு’ வாக்கத்தான் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இதில், மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த விழிப்புணர்வு வாக்கத்தான் வ.உ.சி மைதானத்தில் துவங்கி நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து அக்கல்லூரியில் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் 30 க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பாரம்பரிய மற்றும் உகந்த உணவுகள் பற்றிய விழிப்புணர்வு, கலப்படம் மற்றும் செய்முறை விளக்கம், உணவுப் பொருட்களின் உறையின் மேல் உள்ள விபரங்கள் பற்றிய விழிப்புணர்வு, சரிவூட்டப்பட்ட உணவு பற்றிய விழிப்புணர்வு, உணவு பாதுகாப்பு துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் பற்றிய விளக்கம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர், உணவு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.