சச்சிதானந்த ஜோதி நிகேதன் மாணவி பேச்சுப் போட்டியில் முதல் பரிசு

கோவை கொடிசியாவில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவி தமிழ்ப் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி ஹரிஷினி கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் தமிழ்ப் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார்.

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 8,9,10 வகுப்பு மாணவ, மாணவியருக்கான ‘எனக்குப் பிடித்த புத்தகம்’ தலைப்பில் நடந்த பேச்சுப் போட்டியில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சார்ந்த 25 பள்ளிகளிலிருந்து 50 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். அவர்களில், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவி ஹரிஷினி முதல் பரிசு பெற்றார்.

மாணவியைப் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, பள்ளிச் செயலர் கவிதாசன், கல்வி ஆலோசகர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.