அடிப்படை வசதி செய்து தரக் கோரி அதிமுக கவுன்சிலர்கள் கோரிக்கை

கோவை மாநகராட்சி கமிஷனரிடம் அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து தரக் கோரி அதிமுக கவுன்சிலர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

38 வது வார்டு கவுன்சிலர் சர்மிளா சந்திரசேகர், 47 வது வார்டு கவுன்சிலர் பிரபாகரன், 90 வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர் தங்களது வார்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பிடம் வழங்கினர்.

38 வது வார்டு கவுன்சிலர் ஷர்மிளா சந்திரசேகர் தனது கோரிக்கை மனுவில், கோவை மாநகராட்சி வார்டு எண் 38 க்கு உட்பட்ட பகுதிகளில் சிமென்ட் கான்கிரீட் ரோடு, மழைநீர் வடிகால், சிறு பாலம், புதிய மின்விளக்கு, மூடு பலகை குடிநீர் கழிவு கசிவுகள், திருகு அடைப்பான் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை செய்து தர வேண்டும் என கூறியுள்ளார்.

47 வது வார்டு கவுன்சிலரும், குழு தலைவருமான பிரபாகரன் அளித்த கோரிக்கை மனுவில், 47வது வார்டுக்கு உட்பட்ட சுந்தரர் வீதி கிராஸ் 1 முதல் 3 வரை பிரதான சாலை, பி.எம் சாமி காலனி 1 முதல் 7 வரை பிரதான சாலை, லட்சுமிபுரம் முழுவதும், மேலும் இந்த வார்டுக்கு உட்பட்ட சில வீதிகளில் சாக்கடைகள் தூர்வாரி 10 ஆண்டுகள் கடந்து விட்டது. எனவே, சாக்கடைகளை தூர்வாரி புதுப்பித்து மூடு பலகை அமைத்து தர வேண்டும். மேலும் சாலைகளும் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் தேவையான இடங்களில் சீரமைத்தும் புதிய சாலை அமைத்து தர வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

90 வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் கோரிக்கை மனுவில், 90 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்க சாலைகள் வெட்டப்பட்டு மிகுந்த மோசமான நிலையில் உள்ளது எனவே இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். மேலும் இங்கு அமைந்துள்ள ஹவுசிங் யூனிட் பகுதிகளில் உடனடியாக சாலை அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் கோவையில் உள்ள நூறு வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மூவரும் அளித்த மனுவில், கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகம், பூங்காக்களை பராமரிக்க வேண்டும். மேலும், தெரு நாய்களின் பெருக்கத்தை தடுக்க கருத்தடை செய்ய வேண்டும், சாலைகள் அனைத்தும் பேட்ச் ஒர்க் செய்து தர வேண்டும், சாக்கடைகளை தூர்வார வேண்டும், குப்பைகள் முறையாக அகற்ற புதிய வாகனங்கள் வாங்க வேண்டும், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.