கொடிசியாவில் நாளை துவங்கும் புத்தகத் திருவிழா ரூ. 3 கோடி அளவில் புத்தகங்கள் விற்பனை ஆகும் என தகவல்

கோவை கொடிசியா வளாகத்தில் நாளை தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் ரூ.3 கோடி அளவிற்கு புத்தகங்கள் விற்பனை ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை புத்தகப் பிரியர்களுக்கும், இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு நற்செய்தியாகவும், மாணவர்களிடம் புத்தக வாசிப்பை மேம்படுத்தும் விதத்திலும் கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் 10 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்த ஆண்டு கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து புத்தக திருவிழாவை வெகு விமர்சையாக நடத்த திட்டமிட்டுள்ளன.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு அண்ணா சிலை அருகே உள்ள கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கொடிசியா புத்தகத் திருவிழாவின் தலைவர் விஜய் ஆனந்த், ரோட்டரி மாவட்ட இயக்குனர் மயில்சாமி மற்றும் புத்தகத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் சௌந்தர ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் பேசியதாவது: ஜூலை 22 முதல் 31 ஆம் தேதி வரை 10 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. புத்தக கண்காட்சியின் துவக்க விழா நாளை மாலை 5.30 மணியளவில் நடைபெறுகிறது.

இதில் இளம் படைப்பாளர்களுக்கு விருதுகளும், வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்படுகின்றன. எழுத்தாளர்கள் பலரும் தங்களது நூல்களை இங்கு வெளியிட இருக்கின்றனர். இதில் இளம் எழுத்தாளர்களும் அடங்குவர். ஒவ்வொரு நாளும் பொது மக்களையும், மாணவர்களையும் ஈர்க்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும் மாணவர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளை நடத்தி பரிசளிக்க உள்ளோம்.

ஜூலை 27 அன்று அப்துல் காலம் நினைவு நாளை முன்னிட்டு கோவையில் உள்ள 47 ரோட்டரி சங்கங்கள் இணைந்து புத்தக கண்காட்சி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது. ரோட்டரி சங்கம் சார்பாக தத்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். அதில் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூபாய் 5000 மதிப்பிலான புத்தகங்களை ரோட்டரி சங்கங்கள் இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது.

3000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடையே கட்டுரை போட்டி நடத்தி, அதில் சிறப்பாக எழுதிய 1000 மாணவர்களை தேர்வு செய்து புத்தக கண்காட்சிக்கு அழைத்து வர இருக்கிறோம். இவர்களுக்கு ரூ. 200 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படுகிறது. மேலும் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசும் அளிக்கப்படுகிறது. மாணவர்களிடம் புத்தக வாசிப்பை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்பதையும் பதிவிட்டனர்.

ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் ஒவ்வொரு நாளும் சிறப்புரை ஆற்றுகின்றனர். 150 பதிப்பாளர்களும், 280 அரங்குகளும், சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும் இதில் இடம் பெறவுள்ளன.

சுமார் ஒன்றரை லட்சம் பார்வையாளர்கள் கண்காட்சியை பார்வையிட வருவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தனர். மேலும் வாங்கும் புத்தகங்கள் அனைத்திற்கும் தள்ளுபடி உண்டு. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தக திருவிழாவில் ரூ.1.5 கோடி வரை புத்தகங்கள் விற்பனையானது. இந்த ஆண்டு ரூ. 3 கோடி அளவிற்கு புத்தகங்கள் விற்பனை ஆகும் என எதிர்பார்ப்பதாக கூறினர்.

கொடிசியாவில் இருந்து கண்காட்சிக்கு வருபவர்களுக்கு ஏதுவாக வாகன வசதி செய்யப்பட்டுள்ளதோடு, அரசு பேருந்துகள் இந்த புத்தக திருவிழாவுக்கு சென்று வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.