நவம்பர் 1 ம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம்! – வானதி சீனிவாசன்

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு உருவான தினம் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட்டது, திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடுவதால் தமிழக மக்களுக்கு தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இன்றைய நிலப்பரப்பு, எல்லையுடன் 1956-ம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி தான், தமிழ்நாடு உருவானது. அப்போது, நம் மாநிலத்தின் பெயர் சென்னை மாகாணம். 1967-ம் ஆண்டு, ஜூலை 18-ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில், சென்னை மாகாணத்தை, தமிழ்நாடு என பெயர் மாற்றும் தீர்மானத்தை, அன்றைய முதல்வர் அண்ணா நிறைவேற்றினார்.

அதுபோல மைசூர் மாகாணம், 1972 ஜூலை 29-ல் கர்நாடகம் என பெயர் மாற்றப்பட்டது. தமிழ் மொழி பேசும் பகுதிகள் தனி மாநிலமாக உருவாக்கப்படுவதற்கு முன்பே, தமிழ்நாடு என்ற பெயர் சங்ககாலம் முதலே பயன்பாட்டில் இருந்து வருகிறது. சங்க இலக்கியங்களிலும் தமிழ்நாடு என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாகாணத்தின் பெயரை, தமிழ்நாடு என மாற்றக்கோரி, விருதுநகர் சங்கரலிங்கனார், 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, 1956 அக்டோபர் 13-ம் தேதி உயிர்த் தியாகம் செய்தார். 1961 பிப்ரவரி 24-ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய அன்றைய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம், “மாநில அரசின் அறிக்கைகள், ஆணைகளில் தமிழ்நாடு என்ற பெயர் பயன்படுத்தப்படும்” என அறிவித்தார். தமிழ்நாடு என்ற பெயர் திமுகவின் கண்டுபிடிப்பு அல்ல.

1967 ஜூலை 18-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு என பெயர் மாற்றத் தீர்மானம், 1968, நவம்பர் 23-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1969 ஜனவரி 14-ம் தேதி பொங்கல் திருநாளில் தான் தமிழ்நாடு என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

1956 நவம்பர் 1-ம் தேதி உருவான சென்னை மாகாணம் தான் இன்றைய தமிழ்நாடு. அதே நாளில் தான் கர்நாடகம், ஆந்திரம், கேரளம் தனி மாநிலங்களாக பிரிந்தது. எனவேதான், இந்த மாநிலங்கள் நவம்பர் 1-ம் தேதியை, தங்களது மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. குழந்தை பிறந்த தினத்தை தான், பிறந்த நாளாக கொண்டாடுகிறோம். குழந்தைக்கு பெயர் வைத்த நாளை உலகில் யாரும் கொண்டாடுவதில்லை.

கர்நாடகா என பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 29-ம் தேதியை, கர்நாடக தினமாக அவர்கள் கொண்டாடவில்லை. எனவே, நவம்பர் 1 தமிழ்நாடு தினம் என்ற அரசாணையை, ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 1-ம் தேதியை, தமிழ்நாடு தினமாகவும், ஜூலை 18-ம் தேதியை, தமிழ்நாடு தீர்மான நாளாகவும் கொண்டாடலாம். இல்லையெனில், தமிழ்நாடு என்ற மாநிலமே 1967 ஜூலை 18-ம் தேதி தான் உருவானது என்பதுபோல மக்கள் மனங்களில் பதிந்து விடும்.

தமிழ்நாடு தினத்தை தி.மு.க., அரசு மாற்றினால், ஆட்சி மாறும்போது மீண்டும் மாறும். அதனால் தேவையற்ற குழப்பம்தான் மிஞ்சும். இந்திய நாட்டின் பிரிக்க முடியாத அங்கமான தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க, நவம்பர் 1 தமிழ்நாடு தினம், ஜூலை 18 தமிழ்நாடு தீர்மான நாள் என, இரு நாட்களிலும் உறுதியேற்போம். என தெரிவித்துள்ளார்.