தேசிய அளவில் 6 விருதுகள் பெற்று இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி சாதனை

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி, மாணவர்களை தகவல் தொழில்நுட்பதுறைக்கு தேவையான திறன் வளர்ப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊக்குவித்தல் பயிற்சி வழங்குவதில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளது.

இக்கல்லூரி ஐசிடி அகாடமி லேர்னத்தான் – 2021 வாயிலாக உயர்கல்வி மாணவர்களுக்கு, ஐடி துறைக்கு ஏற்ற அடிப்படையான திறன்களை சுய கற்றல் மூலம் பயிற்சி அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹனி வெல் (Honeywell) நிறுவனம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவியர் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் திறன் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.

இது போன்று டி.எக்ஸ்.சி (DXC) நிறுவனம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ரோபோடிக் பிராசஸ் ஆட்டோமேஷன் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.

இச்சாதனையை ஊக்குவிக்கும் வகையில் ஐசிடி அகாடமி, இந்துஸ்தான் பொறியியல் கல்லூரிக்கு ஆறு விருதுகள் வழங்கி கல்லூரியின் செயல்பாடுகளை அங்கீகரித்துள்ளது.

இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணைய்யனுக்கு சிறந்த பெண் கல்வி அதிபர் விருதை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கி கௌரவித்தார்.

மேலும், செயல் திறன்களை மேம்படுத்தும் ஹனிவெல் மற்றும் டி.எக்ஸ்.சி சென்டர்ஸ் ஆஃப் எக்ஸ்சலன்ஸ் அமைத்தமைக்கான சிறந்த கல்லூரி விருது, கல்வி மற்றும் பல்வேறு தொழில்நுட்பம் வழங்குவதில் வெற்றி பங்குதாரர் விருது, தகவல் தொழில்நுட்பத்தில் 22,000 க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை பெற்றதற்கான லேர்னத்தான் 2021 சாதனை விருது, எக்ஸ்சலன்ஸ் ஆஃப் சி.எஸ்.ஆர் ஆக்டிவிட்டி (ஹனிவெல் மற்றும் டி.எக்ஸ்.சி) விருது, மற்றும் மாத்ஒர்க்ஸ் (Mathworks) சிறப்பு பயிற்சிக்கான விருது, ஆகிய ஆறு விருதுகளை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி பெற்று தேசிய அளவில் சாதனை படைத்துள்ளது.

இச்சாதனையை, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சிறப்பு அங்கீகாரம் அளித்து பாராட்டி உள்ளது,

இதற்கு உறுதுணையாக இருந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை, நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணைய்யன், செயலாளர் பிரியா, கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி கருணாகரன் மற்றும் பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஜெயா ஆகியோர் பாராட்டினர்.