உலகமே தமிழகத்தை உற்றுநோக்க போகிறது! – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஸ்போர்ட் ஸ்டார், சவுத் ஸ்போர்ட்ஸ் என்ற விளையாட்டு வீரர்களுக்கான மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க் கிழமை தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டை துவக்கி வைத்து, கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதில் தனக்கு ஆர்வம் அதிகம் எனவும், எத்தகைய பணிச் சூழல் இருந்தாலும் தானும், கலைஞரும் கிரிக்கெட் போட்டிகளை தவறாமல் பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் சிறப்புரையாற்றி அவர் பேசுகையில்: திமுக அரசு விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் அனைத்து துறைகளிலும் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். அனைத்து சமூகத்தின் வளர்ச்சி என்ற அடித்தளத்தில் திராவிட வளர்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுவது நமக்கு பெருமை. இந்த ஆண்டிற்கான போட்டியை உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் நடத்துவதை கைவிடுவதாக உலக செஸ் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. தமிழ்நாடு அரசு உரிய நேரத்தில் முயற்சியை மேற்கொண்டதன் காரணமாகவே இப்போட்டி சென்னையில் நடைபெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்தப் போட்டி சென்னையில் நடைபெற உள்ளதால் உலகமே தமிழகத்தை உற்றுநோக்க உள்ளது.

விளையாட்டை பொறுத்த அளவில் நானும் கிரிக்கெட் போட்டியில் ஆர்வம் உள்ளவன் தான் என்றும், சென்னை மாநகர மேயர் ஆன பிறகும் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன் என குறிப்பிட்ட அவர், எத்தகைய பணி சூழல் இருந்தாலும் நானும், கலைஞரும் கிரிக்கெட் போட்டிகளை தவறாமல் பார்ப்போம் என தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.