இரட்டை இலையை பாதுகாப்பாரா? பறிகொடுப்பாரா இ.பி.எஸ்?

அதிமுகவில் வெடித்துள்ள உள்கட்சி பூசல் காரணமாக தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக்கூட்டம் கூட இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் குழுவினர் நீதிமன்றத்தை நாடினர். முந்தைய நாள் 8.30 மணி அளவில் வழங்கப்பட்ட தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே இருந்தது. பொதுக்குழுவை கூட்டலாம் என்றும், மேலும் அடிப்படை விதிகளை திருத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை, மனோஜ் பாண்டியன் தரப்பு ஓ.பி.எஸ் சார்பில் அணுகியது.

இதைத்தொடர்ந்து நீதிபதி விசாரணைக்கு இந்த மேல்முறையீடு வழக்கு சென்றது. நள்ளிரவில் 12.30 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை, மறுநாள் அதாவது ஜூன் 23 ஆம் தேதி அதிகாலை வரை சென்றது.

ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட தீர்மானங்கள் தவிர வேறு எதையும் நிறைவேற்றக்கூடாது, புதிய தீர்மானங்களை விவாதிக்கலாம் என அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் பிறகு இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தை அணுக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு போதிய கால சூழ்நிலை இல்லை. எனவே, மிகுந்த பரபரப்புக்கு இடையே பொதுக்குழுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்து விடலாம் என்ற உத்தியை கையாண்டனர். இதன் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வை அங்கீகரிக்கும் தீர்மானத்தையும் நிராகரிக்க முடிவு செய்தனர். இத்தோடு தமிழ்மகன் உசேனையும் அவைத் தலைவராக நியமிக்கும் தீர்மானத்தையும் கொண்டுவந்தனர். இதன் மூலம் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் அவைத் தலைவரிடம் சென்று விடும் என கணக்கு போட்டனர்.

இந்த பொதுக்குழுவிலேயே பொதுச் செயலராக வந்துவிடலாம் என கணக்கு போட்ட எடப்பாடி பழனிசாமிக்கு இது பேரடியாக மாறியது. அனைத்து கூட்டங்களிலும் சிரித்த முகத்துடன் இருந்த எடப்பாடி பழனிசாமி இந்த முறை ஆக்ரோஷமாக இருந்ததையே காண முடிந்தது. கடைசி திட்டத்தின்படி கூட்டம் தொடங்கியவுடன் எழுந்து அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக கூறினார். அதன் பிறகு அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியையும் இப்போதே அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.அதே கோரிக்கையை தான் கே.பி.முனுசாமியும் வைத்தார்.

இதன் பிறகு பேசிய தமிழ்மகன் உசேன், ஜூலை 11 ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூடும் என அறிவித்தார். உடனடியாக ஓ.பன்னீர்செல்வமும், வைத்தியலிங்கமும் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியேறினர்.  மேலும், இக்கூட்டம் சட்ட விரோதமானது என வைத்தியலிங்கம் தெரிவித்தார். இதன் பிறகே பன்னீர்செல்வத்தின் மீது தண்ணீர் பாட்டல் வீசியது, வாகனத்தை பஞ்சர் செய்தது போன்ற சம்பவங்கள் நடந்தன.

தொடர்ந்து வைத்தியலிங்கம் தெரிவித்த பேட்டியில், பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக கருதப்பட்டால் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் நியமனங்களும் நிராகரிக்கப்பட்டதாக கூறினார். ஆகையால் அடுத்த பொதுக்குழுவை ஓ.பன்னீர்செல்வத்தின் கையெழுத்தின்றி கூட்ட இயலாது என தெரிவித்தார். பன்னீர்செல்வம் ஏற்கெனவே கொடுத்த பேட்டியில், தங்களது தேர்வை ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துவிட்டதாகவும், அது பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறுவது ஒரு மரபு என்று தெரிவித்தார்.

அதன் பிறகு சி.வி.சண்முகம் தெரிவித்த பேட்டியில், பொதுக்குழுவில் அங்கீகாரம் பெற்றால் மட்டுமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருகிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் இருக்கும், இல்லையெனில் தானாகவே காலாவதியாகிவிடும் என்றும் இப்போது அவைத் தலைவர், பொருளாளர், தலைமை நிலைய செயலர் ஆகிய பதவிகள் மட்டுமே இருப்பதாகவும், பொதுச்செயலர் இல்லாத நிலையில், அவைத் தலைவர் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.

இப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உள்ளனவா இல்லையா என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய முடியும். இல்லையெனில் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும். ஆகவே இது நீண்ட சட்டப் போரராட்டத்துக்கு செல்லவே வாய்ப்பு அதிகம்.

இப்போதுள்ள சூழ்நிலையில், ஜூலை 11 ஆம் தேதி இ.பி.எஸ். தரப்பு சார்பில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு கூடும் வாய்ப்பு உள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக தேர்வு செய்யப்படலாம். அதற்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றம் அல்லது தேர்தல் ஆணையத்தை நாடி தனது கையெழுத்து இன்றி பொதுக்குழுவை கூட்ட முடியாது என்ற உத்தரவை பெற வேண்டும். இல்லையெனில் மீண்டும் சட்டப் போராட்டத்தை தொடர வேண்டும்.

இந்தியாவில் உள்கட்சி பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் அதிகாரத்தை பெற்ற அதிகாரம் கொண்ட அமைப்பு தேர்தல் ஆணையம் தான். தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை சின்னம் சார்ந்த சட்டத்தின்படி, இரு தரப்பு சின்னத்துக்கு உரிமை கோரினாலும் கட்சி நிர்வாகிகள் பலம், சட்டப்பேரவை, மேலவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை யாருக்கு அதிகமாக உள்ளதோ அவர்களுக்கு தான் கட்சியின் பெயர், சின்னத்தை ஒப்படைக்க வாய்ப்பு உண்டு. இதன் அடிப்படையில் சமாஜ்வாதி கட்சியில் முலாயம்சிங் யாதவும், அகிலேஷ் யாதவும் தேர்தல் ஆணையத்தை நாடும்போது மொத்தமுள்ள 212 பேரவை உறுப்பினர்களில் 198 பேர் அகிலேஷுடன் இருந்தனர். மேலும் அதிக நிர்வாகிகளும் இருந்ததால் அவருக்கே சைக்கிள் சின்னம் வழங்கப்பட்டது.

ஆனால், இப்போது லோக் ஜன்சக்தி கட்சி பிளவில் சிராக் பஸ்வான், பசுபதிகுமார் பராஸ் இடையே யாருக்கு அதிக நிர்வாகிகள் இருக்கிறது என்பதை கணக்கிட முடியாததால் சின்னம் முடக்கப்பட்டது. அதிமுகவை பொறுத்தவரை தொண்டர்களால் தேர்வு செய்யும் தலைமைக்கு தான் அதிகபட்ச அதிகாரம். அதனால் தான், திருநாவுக்கரசர் தேர்தல் ஆணையம் சென்றபோது கூட ஜெயலலிதாவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. இப்போது தொண்டர்களால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் யாருக்கு சின்னம் என்பதை எந்த அளவுகோலால் தேர்தல் ஆணையம் பார்க்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.