சைமா சார்பில் கொடிசியாவில் ஜவுளி இயந்திர கண்காட்சி துவக்கம்

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) சார்பில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களை காட்சிபடுத்தும் ‘டெக்ஸ்ஃபேர் – 2022’ கண்காட்சி சனிக்கிழமை  துவங்கியது. இந்த கண்காட்சி ஜூன் 27 வரை நடைபெற உள்ளது.

இதில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு கண்காட்சியினை துவக்கி வைத்தார். மேலும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர், எல்.முருகன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

துவக்கவிழாவில் தமிழக அமைச்சர்கள் காந்தி, சக்கரபாணி மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டனர்.  சைமாவின் தலைவர் ரவி சாம், துணைத் தலைவர்கள் சுந்தரராமன், துரை பழனிசாமி மற்றும் ஜவுளி துறையைச் சேர்ந்த முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கண்காட்சியினை பார்வையிட நுழைவு கட்டணம் இல்லை. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி நடைபெறும். 220 ஜவுளி இயந்திரங்களை, உதிரி பாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் 295 அரங்குகளில் காட்சிப்படுத்துகின்றனர்.

தமிழகத்தைத் தவிர, குஜராத், மராட்டியம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம், உத்தரகாண்ட், கர்நாடகா, டாமன் டையூ மற்றும் கோவா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஜவுளி இயந்திர, உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் தங்கள் பொருட்களை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தனர். சுவிட்சர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், ஜப்பான், சீன நாடுகளை சேர்ந்த ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்களும் இதில் பங்கு பெற்றனர்.

நாட்டின் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்தியில் 70 சதவீதத்தை கோவை மாவட்டம்   கொண்டுள்ளது. உலகளவில் கோவை ஜவுளித் தொழில் உற்பத்தி மையமாக திகழ்வதால், டெக்ஸ்ஃபேர்  கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கு நல்ல வியாபாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சியின் மூலம் ரூ.1,500 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

துவக்க விழாவினை தொடர்ந்து சைமா அமைப்பின் தலைவர்களுடன் இணைந்து மத்திய ஜவுளி துறை அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.