அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியாச்சு

பரப்பான சூழலில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் நடைபெறவுள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க அவர்களது   இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி  மற்றும் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டனர். ஆதரவாளர்கள் புடை சூழ பரப்புரை வாகனத்தில்  புறப்பட்டு சென்றனர்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் இன்று நடைபெறவுள்ளது.

பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படம் பதித்த பேனர்கள் மட்டுமின்றி இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இணைந்து பூங்கொத்துக்கள் கொடுக்கும் படத்தை கொண்டுள்ள பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பொதுக்குழு கூட்டம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க வானகரத்தில் 2000 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஆதார் அல்லது வாக்காளர் அட்டை போன்றவை கட்டாயம் கொண்டு வரவேண்டு என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க அரசு முடக்குவதைக் கண்டித்தும், ஆளும்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகிறது. இது தவிர முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சனை போன்ற பொது விவகாரங்களை உள்ளடக்கிய 23 தீர்மானங்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீர்மானங்களில், பொதுச் செயலாளர் குறித்த தீர்மானம் இல்லாததால், கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். பொதுக்குழுவில் 23 தீர்மானங்களையும் நிறைவேற்றிய பிறகு, ஒற்றைத் தலைமை குறித்து சிறப்புத் தீர்மானம் கொண்டு வர இபிஎஸ்  தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.