கேள்வி கேட்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்! – முகமது ஜியாவுதீன் மாணவர்களுக்கு அறிவுரை

கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் தீத்திபாளையம் சத்குரு மெட்ரிகுலேசன் பள்ளியில், இன்டரேக்ட் சங்கத்தின் தொடக்க விழாவும் மரக்கன்றுகள் வழங்கும் விழாவும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கனகராஜ், சபியுல்லா, ராஜசேகர், வக்கீல் பிரபு சங்கர், சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் அறங்காவலர்கள் பாலசுப்ரமணியம், சாய்பிரியா, விஜயகுமார், கோகுல கார்த்திக் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி பத்மநாபன் கலந்து கொண்டு தொடக்க உரை நிகழ்த்தினார். நிகழ்வில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: ஒருவர் வாழ்வில் அஸ்திவாரமாக இருப்பது பள்ளி கல்வி தான். எதை நாம் அதிகமாக நினைக்கிறோமா, எதை நமது மனது அதிகமாக விரும்புகிறதோ அதை நாம் நிச்சயமாக அடைவோம். அதனால் தான் கனவு காணுங்கள் என்றார் மேதகு அப்துல் கலாம். மாணவர்கள் தயாராக இருந்தால் ஆசிரியர் தோன்றுவார் என்பது இந்திய ஆன்மிக மரபு. அதை தான் 13 நூற்றாண்டில் வாழ்ந்த சூசி ஞானி ஜலாலுதீன் ரூமி ‘தாகம் கொண்டவர்கள் தண்ணீரை தேடுகிறார்கள் தண்ணீரும் தேடுகிறது தாகம் கொண்டவர்களை’ என்று எழுதினார்.

நல்ல சிந்தனைகளை இளம் வயதில் இருந்து கற்று கொண்டவர்கள் வாழ்வில் தோற்பதே இல்லை. படிக்க வேண்டியதை நன்றாக மனதில் உள்ள அழுக்குகள் போகும் அளவு படிக்க வேண்டும். அவ்வாறு படித்தவர்கள் அதன்படி நடக்க வேண்டும் என்று தான் திருவள்ளுவர் ‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிக்க அதற்கு தக’ என்று திருக்குறளில் எழுதியுள்ளார்.

வகுப்பறைகள் கூட இல்லாத நிலையில் பலர் கற்று மேதைகளாகி இருக்கிறார்கள். நாம் நமக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். பள்ளி பருவத்தில் இருந்து பாட புத்தகங்களோடு நல்ல அறம் சார்ந்த புத்தகங்களையும் கதை, வரலாறு மற்றும் அறிவியல் நூல்களையும், நாட்டுக்கு உழைத்த தலைவர்களின் வரலாறுகளையும் படிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.

நம்பிக்கை, அன்பு, பணிவு, கவனிக்கும் தன்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். செல்போனில் அதிக நேரம் செலவழிப்பதை விடுத்து, மைதானங்களில் விளையாட வேண்டும். மாணவர்கள் கேள்வி கேட்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் பதில் கிடைக்கும். பதிலின் மூலம், தெளிவு பிறக்கும். அவ்வாறு கேள்வி கேட்கும் மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். அதிகாலை எழும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதிகாலை எழுவதால் ஆரோக்கியம் வளரும். ஆரோக்கியம் வளர்வதால் நாம் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை அடைய முடியும்.

மாணவர்களுக்கு உண்மை, நேர்மை, சகிப்பு தன்மை, கீழ்ப்படிதல், தைரியம், நன்னடத்தை, நேரம் தவறாமை ஆகியவற்றை ஆசிரியர்கள் கற்று கொடுக்க வேண்டும். பள்ளிக்கூடம் என்பது குழந்தைகளின் இரண்டாவது கருவறை. ஆசிரியர்கள் தாயை போல பரிவோடும், தந்தையை போல கண்டிப்போடும் இருக்க வேண்டும்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த, எந்தவித கல்வி புலனும் இல்லாத ராமேஸ்வரத்தில் இருந்து மாபெரும் மனிதராக அப்துல் கலாம் வளர அவரது தந்தையும், ஆரம்ப பள்ளி ஆசிரியர் சிவ சுப்பிரமணி ஐயரும், உயர் நிலை பள்ளி ஆசிரியர் ஐயாதுரை சாலமனும் காரணமாக இருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை. எனவே ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை அடையாளம் கண்டு சிறந்த மனிதர்களாக, நல்ல குடிமகன்களாக, மாபெரும் தலைவர்களாக உருவாக்க வேண்டும் என்று கூறினார்.