அனுமதியில்லாத சாயப்பட்டறைகள் அகற்றம்

அனுமதியின்றி செயல்பட்டு வந்த சாயப்பட்டறைகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் இடித்து  அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டதில் உள்ள குமாரபாளையத்தில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த 10க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டுள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் முறையாக தணிக்கை செய்யவில்லை என, சாய ஆலை உரிமையாளர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சாய சலவை ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில், சில சாயப்பட்டறைகள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் முறையாக அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதாகவும், சாயக் கழிவு நீரினை சுத்திகரிப்பு செய்யாமல், சாக்கடை கால்வாய் வாயிலாக காவிரி ஆற்றில் கலக்கும் வகையில் வெளியேற்றி வருவதாகவும் புகார் எழுந்தது.

அதனைத்தொடர்ந்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட அலுவலர் மோகன் தலைமையிலான குழுவினர், இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி இன்றி இயங்கி வரும் சாயப்பட்டறைகளை கண்காணித்து இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சாயப்பட்டறை உரிமையாளர்கள், உரிய அனுமதி பெற்று இயங்கி வரும் சாய சலவை ஆலயத்தை நடத்திவருவதாகவும்,  சாயப் பட்டறைகளில்  வேதிப்பொருள் எதிர்வினை குறைந்தளவில் பயன்படுத்துவதாகவும், அதிகளவில் வேதிப் பொருள் கொண்ட சாய பவுடர்களை பயன்படுத்தும் பெரிய ஆலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஆலை உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், சாயப்பட்டறைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தும் பணியினை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.