மீண்டும் பள்ளிக்கு போகலாம்  – தமிழ் பாடத்தை கவனித்த முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் அன்பில் மகேஷ்

திருவள்ளூர் மாவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் வகுப்பறை, கழிவறை மற்றும் சமையலறையில் ஆய்வு மேற்கொண்டார்.

கோடை விடுமுறைக்குப் பிறகு அனைத்து அரசுப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. கொரோனா தொற்று அச்சத்தின் மத்தியிலும் மாணவர்கள் இன்று பள்ளிக்கு வந்தனர். புதிதாக இணையும் குழந்தைகளுக்கு மலர் கொடுத்து சிவப்புக் கம்பளம் வரவேற்பு நிகழ்ச்சி திருவஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதுபோன்ற பல பள்ளிகளில் புதிய மாணவர்களுக்கு விதவிதமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்புகளை வழங்கி வரவேற்றனர். முதல் நாளான இன்றே மாணவர்களுக்கு பாடபுத்தகங்களும் வழங்கபட்டன.

இதையடுத்து, தமிழக அரசு உத்தரவின் பேரில் நீதி போதனை கதைகள் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாளைக்கு நீதிபோதனை பாடங்கள் நடத்தப்படும் என்றும் மேலும் தமிழக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள இந்த கல்வியாண்டிற்கான ‘எண்ணும் எழுத்தும்’ பாடத்திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் முதல்வர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தி, ‘இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன். கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. அப்படி இருந்தாலும், ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்றீர்கள். ஆனாலும், பள்ளியில் அமர்ந்து கற்கும் அனுபவத்துக்கு இணையானது ஏதுமில்லை. பள்ளிச்சூழலே கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும்.

இடையில் தடைபட்ட வாய்ப்பை இப்போது அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவ   மாணவியர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அதேபோல், இருபால் ஆசிரியர்களுக்கும்  எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களைக் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தடைபட்ட கல்வியைத் தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்! மாநிலம் பயன்பெறட்டும்!’  என்று தெரிவித்துள்ளார்.

முதல் நாள் பள்ளி திறப்பையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்ம்  திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குச் சென்றார். அங்கு, ‘எண்ணும் எழுத்தும்’ என்ற திட்டத்தை அவா் தொடங்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல், 10ம் வகுப்புக்கு  சென்ற  ஸ்டாலின், அங்கே மாணவர்களின் பெஞ்ச் வரிசையில் அமர்ந்து தமிழ் பாடத்தைக் கவனித்தார். அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்ம் உடனிருந்து பாடத்தை கவனித்தார்.

இதையடுத்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் 2025 ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் மாணவா்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே ”எண்ணும் எழுத்தும்” திட்டத்தின் நோக்கம் என்றார். இந்தத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவா்களும் 8 வயதிற்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும், அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும் என்பது இந்த திட்டத்தின் இலக்கு என்றும்  கூறினார்.

ஒவ்வொரு பாடத்திற்கும் தனித் தனிக் குழக்கள் அமைக்கப்பட்டு இந்த திட்டத்தை செழுமைப்படுத்துவார்கள் என்றும்  நம்பிக்கைத் தெரிவித்தார். மாணவர்கள் எப்போதும் படிப்பு படிப்பு என்று இருக்க வேண்டும் என்று முதல்வராக  இல்லாமல் ஒரு தந்தையாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார். படிக்காமல் சாதித்த யாராவது ஒருவரைக் காட்டினால், படித்துச் சாதித்த லட்சம் பேரை நாம் காட்ட முடியும் என்றும், படிக்காமல் சாதிக்க முடியும் என யாராவது சொன்னால் அது வெறும் ஆசை வார்த்தை, சூழ்ச்சி என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனிடையே முதல்வருக்கு  பின், பெஞ்சில் அமர்ந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ் ஆசிரியை நடத்தும் பாடத்தை கைகளை கட்டிக்கொண்டு கவனித்தார். முதல்வருடன் வகுப்பில் அமர்ந்திருப்பதை நம்ப முடியாமல், மாணவர்கள் அதிர்ச்சியில் அவரை திரும்பிப் பார்த்துக் கொண்டே பாடத்தை கவனித்த சம்பவமும் அங்கு நடந்தேறியது.

அதன்பின்னர், வகுப்பறையில் இருந்து கிளம்பிய  ஸ்டாலின், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை சுகாதாரமாக இருக்கிறதா என்று ஆய்வு செய்தார். அதேபோல் மாணவர்களுக்காக சத்துணவு சமைக்கப்படும் சமையல் அறையிலும் முதல்வர் சோதனை செய்தார்.