தன்னைத்தானே இழிவுப்படுத்திக்கொண்ட ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் ‘முதல்வர் ஸ்டாலின் நடத்தை கண்டு வெட்கப்படுகிறேன்’ என தமிழக பா.ஜ.க , தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவரையும் உள்ளடக்கிய தமிழகத்தின் வளர்ச்சியே திராவிட மாடல் ஆட்சி என தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், கச்சத் தீவை மீட்டுத் தர வேண்டும்,  தமிழக திட்டங்களுக்கு நிதி பங்களிப்பதை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார். அதுவே உண்மையான கூட்டாட்சியாக அமையும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

“ஒரு சாதாரண இந்திய குடிமகனாகவும், பெருமைக்குரிய தமிழனாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மோசமான நடத்தையால் வெட்கப்படுகிறேன். நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இங்கு வந்தார். பாஜகவின் நிகழ்ச்சிக்காக வரவில்லை. முதலமைச்சர் இந்த விழாவில் நன்றாக நடந்துகொள்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் தன்னைத்தானே இழிவுப்படுத்திக்கொண்டார்.

முதல்வர் ஸ்டாலின் கச்சத்தீவு பற்றி பேச விரும்புகிறார். ஆனால், அந்த தீவை 1974ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தான், இலங்கைக்கு பரிசாக அளித்தார் என்பதையும், அப்போது காங்கிரஸ் உடன் திமுக தான் கூட்டணி வைத்திருந்தது என்பதையும் முதல்வர் எளிதாக மறந்துவிட்டார். இந்த விஷயத்தில் திடீரென முதல்வருக்கு விழிப்பு வந்தது ஏன்?

ஜி.எஸ்.டி., விவகாரத்தை பொறுத்தவரை, ஜி.எஸ்.டி., கவுன்சில் தான் அனைத்தையும் முடிவு செய்கிறது. இழப்பீடு தொகை, ஜூலைக்கு பிறகுதான் வழங்கப்படும். இதில் எந்த பிரச்னையும் இல்லை. முதல்வர் கூட்டாட்சி குறித்து பேசினார். ஆனால், கூட்டாட்சிக்கு உதாரணமாக திகழும் ஜி.எஸ்.டி., கவுன்சிலை இழிவுபடுத்துகிறார். நிலுவைத்தொகை முறைப்படி வழங்கப்படுகிறது.

ஆனால், அதனை மு.க.ஸ்டாலின் பொருப்படுத்தவில்லை. அரசியல் செய்வதில் மட்டுமே அவர்கள் ஆர்வம் காட்டுகின்றார். பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மீதும் மற்றும் கலாச்சாரம் மீதும்  தனது பற்றை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தி வந்துள்ளார். இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால், இந்த பிரச்சினையில் அவர் கூறியதை அவரே நம்ப மாட்டார். அற்ப அரசியல் மட்டுமே முதல்வர் செய்து வருகிறார்” என்று அண்ணாமலை கறாராக தெரிவித்துள்ளார்.