கோவையில் மாமன்ற உறுப்பினர் கூட்டம்: அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

கோவை மாநகராட்சி மன்றத்தில் கொடுக்கப்பட்ட 70 தீர்மானங்களில் மக்களுக்கான திட்டம் எதுவும் இடம்பெறவில்லை என அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் மூன்றாவது முறையாக வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த 47 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், 90 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மேலும், மாமன்ற அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாமன்ற உறுப்பினர் பிரபாகரன்: “கோவை மாநகராட்சி சொத்து வரியை உயர்த்தி மக்கள் மீது சுமத்தியுள்ளது. மாமன்ற கூட்டத்தின்படி 3 நாட்களுக்கு முன்பே தீர்மானங்களை கவுன்சிலர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு அவசரமாக கொடுக்கப்பட்டது. இதனை மாமன்ற உறுப்பினர்கள் எப்படி படித்து இருப்பார்கள்? இதில் 70 தீர்மானங்கள் கொடுக்கப்பட்டது. இந்த தீர்மானங்களில் மக்களுக்கான திட்டம் எதுவும் இடம்பெறவில்லை.” என்றார்.