ஜூன் முதல் வாரம் கோட்டை முற்றுகை: ஜூன் 3 கருணாநிதி சிலை திறப்பு

பெட்ரோல் டீசல் விலையை மாநில அரசு, 72 மணி நேரத்துக்குள் குறைக்க வேண்டும் இல்லையென்றால், ஜூன் முதல் வாரத்தில் சென்னை கோட்டையை முற்றுகையிடுவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அண்ணாமலை கொடுத்த, கெடு இன்றோடு முடிவடைகிறது. இதையடுத்து, தமிழக பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில், நேற்று போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடந்தது.

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாயும், குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், பெட்ரோலுக்கு ரூ.3 மட்டும் குறைத்து விட்டு, டீசலுக்கு விலை குறைக்காமல் மக்களை ஏமாற்றிவிட்டனர் என்று பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக, கெடு முடிந்த பின்னும் தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் இருப்பதால்,  அறிவித்தபடியே  சென்னை கோட்டையை நோக்கி, பாஜக முற்றுகை போராட்டம் நடத்தும் அதற்கான ஏற்பாடுகளை, தமிழக பாஜக தொடங்கிவிட்டது என பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

ஜூன் 3ம் தேதி கலைஞர் கருணாநிதி சிலை நிறுவப்படும் தருணத்தில், பாஜக கோட்டையை சுற்றி முற்றுகை போராட்டம் நடத்த இருக்கிறது. ஏற்கனவே, திருவாரூர் தெற்கு வீதிக்கு கருணாநிதி பெயர் சூட்ட இருந்த அரசின் முயற்சிக்கு, எதிராக  பாஜக, பிரம்மாண்ட போராட்டம் நடத்தியது. அதைவிட, பிரம்மாண்டமாக கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே, தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்கு எல்லாம் பாஜக முட்டுக்கட்டை போடுவதாக தெரிகிறது.