சவால் விட்ட டிராய் தலைவர் : கெத்து காட்டிய ஹேக்கர்

டிராய் அமைப்பின் தலைவர் ராம் சேவாக் ஷர்மா தன்னுடைய 12 இலக்க ஆதார் எண்- ஐ ட்விட்டரில் பகிர்ந்து, என் ஆதார் எண்ணை வைத்து கொண்டு எனக்கு என்ன தீங்கிழைத்துவிட முடியும் என்று நிரூபியுங்கள் என்று சவால்விட்டு இருந்தார்.

அதற்கு, ட்வீட்டரில் பதிலளித்த ஃப்ரெஞ்ச் ஹேக்கர், இலியட் ஆல்டர்சன், ராம் சேவாக் ஷர்மாவின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்கும் தொலைபேசி எண், பிறந்த நாள், மின்னஞ்சல் முகவரி – ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.

இலியட் ஆல்டர்சன் ஆதாரில் உள்ள பாதுகாப்பு கோளாறுகளை தொடக்கத்திலிருந்தே சுட்டிகாட்டி வருபவர்.

இலியட் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில், ஷர்மா ஒரு பெண்ணுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, உங்கள் அருகில் இருப்பவர் உங்கள் மகளாகவோ அல்லது மனைவியாகவோ இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது வங்கி கணக்கில் ஒரு ரூபாயையும் அனுப்பி உள்ளார் . இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.