சர்க்கரை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் இந்தியா

உலகின் சர்க்கரை உற்பத்தியில் பெரிய நாடாக திகழும் இந்தியா, உள்நாட்டில் சர்க்கரை விலையை கருத்தில் கொண்டு ஏற்றுமதியை கட்டுப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் போதிய அளவில் சர்க்கரை கையிருப்பில் இருப்பதை உறுதி செய்வதற்கும், விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் சர்க்கரை ஏற்றுமதியை கண்காணிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

அதன்படி, ஜூன் 1 ம் தேதியிலிருந்து சர்க்கரை ஆலைகள் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு உணவு மற்றும் பொது விநியோகத் துறையில் இயக்குனரிடம் அனுமதி பெற்று ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் எவ்வளவு சக்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறித்து விவரங்களை தினம்தோறும் உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு ஆன்லைன் மூலமாக தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவலிலின் படி, 10 மில்லியன் டன் சர்க்கரைக்கு மேல் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனேவே கோதுமை ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்த நிலையில் சர்க்கரை ஏற்றுமதிக்கு குறிப்பிட்ட அளவில் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக சர்க்கரை ஏற்றுமதியை மத்திய அரசு கட்டுப்படுத்தியுள்ளது.

பிரேசிலுக்கு அடுத்தபடியாக சர்க்கரையை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.