தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உலக தேனீ தினம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் மே 20 அன்று கொண்டாடப்பட்டது.

உலக தேனீ தினத்தின் நோக்கம், சுற்றுச்சூழல் அமைப்பில் தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் உயிரினங்களின் பங்கை அங்கீகரிப்பதாகும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தேனீ வளர்ப்பகத்தில் உலக தேனீ தின கொண்டாட்டத்திற்கான நிகழ்வை துவக்கி வைத்தார்.

முன்னதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இளங்கலை பயிலும் மாணவர்களும், தமிழ்நாட்டின் முன்னோடி தேனீ வளர்ப்பாளர்களும் அமைத்திருந்த தேனீ வளர்ப்பு கண்காட்சியை திறந்து வைத்தார்.

தேனீ வளர்ப்பாளர்களுடன் கலந்துரையாடி அவர்கள் மேற்கொள்ளும் தேனீ வளர்ப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன், பூங்கொத்து வழங்கி கெளரவித்தார். புதுப்பிக்கப்பட்ட தேனீக்கள் ஆய்வகத்தையும் துணைவேந்தர் திறந்து வைத்தார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தேனீ வளர்ப்பவர்களிடம் உரையாற்றிய அவர், இலக்குகளை அடைய தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தேனீக்களின் அழிவை ஏற்படுத்தும் காரணிகளில் இருந்து தேனீக்களை பாதுகாக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.