தமிழ் எழுத்துக்களில் ஓவியம்: ஆனந்த் மகேந்திரா பாராட்டு

தமிழ்நாட்டின் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த எழுத்துரு ஓவிய கலைஞர் கணேஷ் என்பவர், பிரபல தொழிலதிபரும் மகேந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மகேந்திராவின் உருவத்தை தமிழின் பண்டைய எழுத்துக்கள் உட்பட 741 எழுத்துக்களைக் கொண்டு படமாக வரைந்துள்ளார். இதனை ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

ஓவியர் கணேஷ், ஆனந்த் மகேந்திராவின் உருவத்தை தமிழின் பண்டைய எழுத்துக்களால் வரையும் பொழுது அதனை வீடியோவாக எடுத்து மே 18 ஆம் தேதி, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் ஆனந்த் மகேந்திராவின் ட்விட்டர் பக்கத்தையும் இணைத்து டேக் செய்து, இது பற்றிய உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன் எனவும் ட்வீட் செய்து இருந்தார்.

இந்நிலையில் இன்று, கணேஷின் ட்விட்டுக்கு ஆனந்த் மகேந்திரா பதில் அளித்துள்ளார். இந்த படத்தையும் தமிழ்மொழியின் பிரம்மாண்டத்தையும் கண்டு வியப்பதுடன், இந்த ஓவியத்தை அவரின் வீட்டில் வைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “ஆஹா, என் உருப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது, நான் வியக்கிறேன். தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக , உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பபடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், “உங்களின் வேலை பளுவிற்க்கு இடையில் எனக்கு நேரம் ஒதுக்கி என்னை பாராட்டியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். உங்களிடம் இந்த ஓவியத்தை கொடுக்க காத்திருக்கிறேன்.” என ஓவியர் கணேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா ட்விட்டர் வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இயங்குபவதோடு, தனித்துவமான செயல்கள் மற்றும் சாதனையை கண்டறிந்தால் அதற்கு பாராட்டுகளையும் வெகுமதிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.