இந்தியாவில் 11.6 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது அமேசான் நிறுவனம்

இந்தியாவில் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் 11.6 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதனை நிறைவேற்றி உள்ளதாக அமேசான் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

மேலும் 40 லட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகள் இன்றைய தேதி வரை ஒட்டுமொத்தமாக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஆன்லைன் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020 – ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்நிறுவனம் அமேசான் ஸம்பாவ் என்னும் வருடாந்திர மாநாட்டை நடத்தியது. அப்போது வரும் 2025-ம் ஆண்டுக்குள் 1 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆன்லைன் வர்த்தகத்திற்கு கொண்டு வருவதாகவும், அவர்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதியை 1000 கோடி ரூபாயாக உயர்த்தவும், 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க இருப்பதாகவும் உறுதியளித்தது. உறுதிமொழிக்கு ஏற்ப இந்நிறுவனம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அமேசான் ஸம்பாவ் மாநாட்டில், இந்நிறுவனம் 25 கோடி ரூபாய் வென்ச்சர் நிதியை அறிவித்தது. இந்த தொகை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்காக முதலீடு செய்யப்பட உள்ளது. மேலும் சிறிய மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கவும், புதுமையான பணிகளை மேற்கொள்ளும் தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆதரிப்பதற்கும் இந்த நிதியை இந்நிறுவனம் பயன்படுத்த உள்ளது. இந்த நிதியின் ஒரு பகுதியை இந்நிறுவனம் ஏற்கனவே “மைக்ளாம்”, “எம்1எக்சேஞ்ச்” மற்றும் “ஸ்மால்கேஸ்” ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளது. இந்த தொகையை புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோர் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் வளர்ச்சிக்கும், அவர்களுக்கான தொழில்நுட்பங்களை வழங்குவதற்காகவும் பயன்படுத்துவதில் அமேசான் உறுதியாக உள்ளது.

அமேசான் தனது மக்கள் மற்றும் தொழில்நுட்ப வளங்களை நிதியத்தின் கவனம் செலுத்தும் பகுதிகளில் முதலீடு செய்வதில் உறுதியாக உள்ளது, இதில் அதிக அளவிலான புதுமை மற்றும் தொழில் முனைவோர் ஆற்றலைக் காணும் பல புதிய மற்றும் வளர்ந்து வரும் பகுதிகள் அடங்கும். மேலும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிதி திட்டத்தை மேலும் விரிவாக செயல்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அமேசான் இந்தியா நிறுவனத்தின் இந்திய நுகர்வோர் வணிக பிரிவு மேலாளர் மணீஷ் திவாரி கூறுகையில், எங்கள் நிறுவனம் இந்தியாவில் துவங்கப்பட்ட 2013-ம் ஆண்டில் இருந்து இதுவரை ஒட்டுமொத்தமாக 11.6 லட்சத்திற்கும் அதிகமான வேலைகளை உருவாக்கி உள்ளது. மேலும் 40 லட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை டிஜிட்டல்மயமாக்கி அவர்களின் தயாரிப்புகளை 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளோம். இந்தியா முழுவதும் உள்ள இதுபோன்ற நிறுவனங்களுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதால் அவர்களின் தேவைகளைப் புரிந்து அவர்களுக்கு ஏற்ற தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டுவருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது இந்திய வணிகங்களின் தொழில் முனைவோர் உணர்வை வெளிக்கொண்டு வரவும், நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். தொழில்நுட்பம் மற்றும் மொபைல் இன்டர்நெட் ஆகியவை இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமாக விளங்கி வருகின்றன. மேலும் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் எங்களின் பங்களிப்பும் இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்தார்.