தாகம் இல்லாவிட்டாலும் போதிய அளவு நீர் குடியுங்கள்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை

கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், நீர்ச்சத்து குறையாத வண்ணம் இயற்கையான பானங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்றும், தாகம் இல்லாவிட்டாலும் கோடைகாலத்தில் போதிய அளவு நீர் குடிக்க வேண்டும் என்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை அபிராமபுரத்தில் ‘கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு’ விழிப்புணர்வு கண்காட்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கூறியதாவது: வேலூர், தருமபுரி, மதுரை, கரூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவசியமில்லாமல் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நீர்ச்சத்து குறையாத வண்ணம் இயற்கையான பானங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும் கோடைகாலத்தில் போதிய அளவு நீர் குடிக்க வேண்டும். வெயில் காலம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். கோடை முடியும் வரை தண்ணீர் பாட்டிலை வெளியே எடுத்து செல்வது நல்லது. தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றார்.

கோடை வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளன எனக் கூறிய அவர், கோடை விடுமுறையை முன் கூட்டியே அறிவிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முடிவெடுக்கும் என்பதையும் தெரிவித்தார்.

தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடைபெறவுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

XE வகை தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தெரிவித்த அவர், அதனால் பெரிய அளவில் அச்சப்பட வேண்டியதில்லை எனக் கூறினார். அந்த வகை தொற்றால் ஏற்படும் மரணங்கள் குறைவாகத்தான் உள்ளது. மேலும், தமிழகத்தில் தற்போது வரை XE வகை தொற்று கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தார்.