மும்பையில் எக்ஸ் இ கொரோனா உறுதி செய்யப்படவில்லை – மத்திய அரசு தகவல்

இந்தியாவில் புதிய வகை ‛எக்ஸ்.இ’ கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது எனவும் இத்தொற்றுக்கு மும்பையில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல் வெளிய நிலையில், தற்போது வரை புதிய திரிபு உறுதி செய்யப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ்கள், இப்போதுதான் படிப்படியாக குறையத் துவங்கியது. ஆனால், சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அங்கு பல நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

ஒமைக்ரானின் துணை திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா, மும்பையை சேர்ந்த ஒருவருக்கு  உறுதியாகியுள்ளது எனவும், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதாகவும் மும்பை மாநகராட்சி தெரிவித்தது.

எக்ஸ் இ எனப்படும் புதிய மாறுபாடு, ஒமைக்ரான் பிஏ1 மற்றும் பிஏ2 ஆகிய இரண்டு மாதிரிகளின் கலப்பாகும். இந்த வைரஸ் 10 மடங்கு வேகமாக பரவக்கூடியது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமடைய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், எக்ஸ் இ வைரஸால் மும்பையில் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது வரை அது உறுதி செய்யப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மும்பை மாநகராட்சியின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் புதிய திரிபுவால் அந்த நபர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பது உறுதி செய்யப்படவில்லை என டெல்லியில் உள்ள மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.