மண்ணே மருந்தாகும் ! மூலிகை காற்று பட்டாலே தேகம் ஆரோக்கியம் பெரும் !

திருக்கச்சூரில் தரிசனம் செய்தால் திருவண்ணாமலையில் தரிசனம் செய்வதற்கு சமம்

திருக்கச்சூர் – விருந்திட்டவரும், மருந்திட்டவரும் அருகருகே கோவில் கொண்டு அருள்பாலிக்கும் திருத்தலம்.

செங்கல்பட்டு மாவட்டம் – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மறைமலை நகரிலிருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டார் தொலைவில் உள்ளது இந்த அற்புத திருத்தலம்.

இங்குதான் மலையடிவாரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு பிச்சை எடுத்து விருந்திட்ட கச்சமேஸ்வரர் ஆலையம் அமைந்திருக்கிறது.

அதிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மூலிகை மலை உள்ளது. இங்கு தான் இந்திரனின் பிணி தீர்க்க உதவிய பலை, அதி பலை என்ற சாகா மூலிகை உள்ளது என்றும், அவற்றை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய இந்திரனுக்கு ஒளிபாற்றி அருளினாள் அம்பிகை என்றும் சொல்லுகிறார்கள். இருளை நீக்கி உதவியதால் அம்பிகைக்கு “இருள்நீக்கி அம்மை” எனும் பெயர்பெற்றது.

மண்ணே மருந்து.

இந்திரன் தனது தீராத வியாதியுடன் அவதிப்பட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த நாரதர் ஈசனை நோக்கி  தவம் செய் என்றார். நாரதரின் அறிவுரைப்படி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்.

அப்போது காட்சியளித்த சிவபெருமான், திருக்கச்சூர் ( அதிபதி மலை, சஞ்சீவி மலை என்றும் பெயர் உள்ளது ) என்ற ஊரில் உள்ள மலையில் மூலிகை உள்ளது என்றார்.

இந்திரனும் அந்த திருக்கச்சூர் மலைக்கு சென்றார். அந்த மூலிகை ஒரு இருட்டான இடத்தில் இருப்பது இந்திரனுக்கு தெரியவில்லை. பின்னர் நாரதரிடம் சென்று எங்கு தேடியும் மூலிகை கிடைக்கவில்லை என்ன செய்வது என்று கேட்டார். அதற்கு நாரதர் மறுபடியும் சிவபெருமானை நோக்கி தவம் செய் என்றார்.

இந்திரனும் கடும் தவத்தில் ஈடுபட்டனர். அப்போது காட்சியளித்த ஈசன், நீ அம்பாளை மறந்து என்னை மட்டும் நினைத்து தவம் செய்கிறாய். அதனால் தான் அம்மை உன்னிடம் விளையாட்டு காட்டுகிறாள். அம்பாளையும் நினைத்து தவம் செய் என்றார் ஈசன்.

இந்திரனும் அம்பாளையும் ஈசனையும் நினைத்து தவம் செய்கிறார். அம்பாள் தோன்றினாள். மறைத்து வைத்திருந்த மூலிகைகளின் மீது ஒளிபரப்பி இருள் நீக்க செய்து அவற்றை வழங்கியதால் இருள் நீக்கி அம்மையார் என்றும் அழைக்கப்படுகிறாள்.

அப்போது சிவபிரான், திருக்கச்சூரின் மண்ணை எடுத்து இட்டாலே தீரா பிணி நீங்கும். இங்கு மண்ணே மருந்து என வரம் அளித்தார். இதன் காரணமாக ஈசனுக்கு ஒளஷதீஸ்வரர் என்கிற மருந்தீஸ்வரர் பெயரும் உண்டு.

ஒளஷதம் என்றால் மருந்து சம்பந்தப்பட்டது. இங்கு கிரிவலம் இருப்பதால் கிரீஸ்வரர் மற்றும் ஒளஷதகிரீஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார்.

தலவரலாறு :

தேகபலத்திற்காக மருந்தீஸ்வரனையும் ( ஈசனையும் ), கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை, திருமண தடை நீங்க அம்பாளையும் வேண்டினாள் மிகவும் விசேஷமானது என்று இக்கோவிலின் தலவரலாறு கூறுகிறது.

சிவபிரானும் அம்பாளும் மேற்கு முகமாக இருப்பதனால் கோவிலில் தரிசனம் செய்பவர்கள் அனைவரும் திருவண்ணாமலையில் ( அண்ணாமலை / உண்ணாமலையாருன்னு ) தரிசனம் செய்வதற்கு சமம் என்று தலவரலாற்றில் உள்ளது.

இங்கு  பௌர்ணமி கிரிவலம் உண்டு. சிவராத்திரி, கார்த்திகை – சோமவாரம் ( 5 நாட்கள் ), நவராத்திரி ( 10 நாட்கள் உச்சவம் ), சுந்தர விழா இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இங்கு கிரிவலத்தில் பங்குபெறும் பக்தர்கள் மீது மூலிகை காற்று பட்டால் தேக ஆரோக்கியத்தை அளிக்கும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் மற்றுமொரு விசேஷம் சதுர்முக சண்டிகேஸ்வரர். திருமீயச்சூருக்கு அடுத்து இங்கு தான் சண்டிகேஸ்வரருக்கு நான்கு முகங்கள் உள்ளது என்று சொல்லுகிறார்கள்.

அப்படிப்பட்ட இந்த அற்புதமான திருத்தலத்திற்கு ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். சகல நன்மைகளும் உண்டாகும்.