கோவையில் பாதுகாப்பு தொழில் சார்ந்த நிறுவனம் – சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை புதன்கிழமை மீண்டும் கூடியுள்ளது. இக்கூட்டத்தொடர் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது

சட்டப்பேரவையில் கடந்த மாதம் 18-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கையும், அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீதான விவாதங்களுக்கு அத்துறை அமைச்சர்கள் பதில் அளித்ததைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் 24-ம் தேதி நிறைவடைந்தது.

இந்நிலையில், துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் மீண்டும் தொடங்கியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, தொழில் பூங்கா தொடர்பாக, உறுப்பினர் ராஜேந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் வளர்ச்சி அடைவதற்கு தொழில் பூங்காக்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் ஒரு சில இடங்களில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் எழுவதாக தெரிவித்தார்.

இருந்தாலும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் நிலங்களை கையகப்படுத்தி தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இவ்வாறு தான், கோவையில் பாதுகாப்பு காரிடர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் கோவையை மையமாக வைத்து பாதுகாப்பு தொழில் சார்ந்த நிறுவனங்களை கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், முதலமைச்சரும் டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்து இதை வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

இதே போல, சூலூரில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் பாதுகாப்பு தொழில் வழி தட அருகில் தொழில் பூங்கா அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதாவும் அமைச்சர் கூறினார்.