மூலப்பொருள் விலையேற்றத்தால் தமிழகத்தில் தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம்

மூலப்பொருட்களின் தொடர் விலையேற்றம் காரணமாக, விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி புதன்கிழமை (ஏப்ரல் 06) முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு, வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, சங்கரன்கோவில், திருவேங்கடம், குடியாத்தம், காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி நடந்து வருகிறது. இதில் கோவில்பட்டியில் 80% தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் தீப்பெட்டி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களின் விலை கடந்த மூன்று மாதங்களில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் விலையேற்றம் அதிகரித்து வருவதால், உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

ஒரு தீப்பெட்டியின் விலை 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த நவம்பர் மாதம் இரண்டு ரூபாயாக உயர்த்தப்பட்டது.

இதனால் 600 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு பண்டலின் விலையை ரூ.300-ல் இருந்து ரூ.350-ஆக ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்த்துவதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவித்தனர். ஆனால், வியாபாரிகள் இந்த விலையேற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், மூலப்பொருட்களின் விலை உயர்வைக்‍ கண்டித்தும், உற்பத்தித் தேக்கம் மற்றும் விற்பனை வாய்ப்பு இல்லாததால் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகளை மூடுவதாக உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதன் காரணமாக, சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், 6 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

“தீப்பெட்டி ஆலைகளை நிரந்தரமாக மூடுவதைத் தவிர வேறு வழியில்லை”!

இது குறித்து விகடனில் வெளிவந்த கட்டுரையில், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியளர் சங்கத்தின் செயலாளரான சேதுரத்தினம் கூறியிருப்பது: தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களின் விலை அதிகரித்துள்ளது என்பதை வியாபாரிகள் அறிந்திருந்தாலும், தீப்பெட்டி பண்டலுக்கான விலை உயர்வை ஏற்க மறுக்கிறார்கள் என கூறினார்.

தற்போது தீப்பெட்டி கை இருப்பும் அதிகமாக உள்ளது என்றும் உற்பத்தியைத் தொடர்ந்து நடத்திட வேண்டும் எனில், பணம் தேவை எனவும், பழைய விலைக்கே தீப்பெட்டி பண்டலைக் கொடுக்க முடியாது என்பதை வியாபாரிகளுக்கு உணர்த்திடவே இந்த உற்பத்தி நிறுத்தம் என்றும் அவர் கூறினார்.

எங்களின் நிலைமை அறிந்து தீப்பெட்டி விலை உயர்வை வியாபாரிகள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

சீனாவில் இருந்து தற்போது அனுமதி இல்லாத லைட்டர்ஸ் விற்பனைக்கு வருகிறது. இந்த லைட்டர்களால் 30% வரை விற்பனை பாதிக்கிறது என் குற்றம் சாட்டினார்.

மேலும் ஒவ்வொரு பொருள் உற்பத்தியிலும் 72 பைசா, உற்பத்தி நிறுவனத்துக்குக் கிடைப்பதாகவும், எங்களுக்கு 42 பைசா மட்டுமே கிடைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களைத் தமிழக அரசின் சிட்கோ மூலம் மானிய விலையில் வழங்கிட வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையை அப்போதைய அ.தி.மு.க அரசும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன் வைத்தார்.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட அமைச்சரான கீதாஜீவன், மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோருக்கு மனு அளித்தும் பலனும் இல்லை என்றும் இதே நிலை நீடித்தால் தீப்பெட்டி ஆலைகளை நிரந்தரமாக மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார்.

 

Source: Vikatan