128 பேருக்கு பத்ம விருதுகள்: குடியரசுத் தலைவர் வழங்கினார்

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை திங்கட்கிழமை வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இதில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

கடந்த மார்ச் 21-ம் தேதி நடைபெற்ற முதல் விழாவில் 54 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது.
இதையடுத்து இரண்டாவது விழா, டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆண்டு நான்கு பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 107 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பிரிவில் 10 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டது. மேலும் 13 பேருக்கு மரணத்துக்கு பிறகு விருது அறிவிக்கப்பட்டது.

74 பிரபலங்களுக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். விழாவில் பாரம்பரிய இந்துஸ்தானி இசைப் பாடகர் பிரபா அத்ரே, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

பிரபல இந்தி மற்றும் வங்காள நடிகர் விக்டர் பானர்ஜிக்கும் கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் ஹைதராபாத் பாரத் பயோடெக்நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி எல்லா, அவரது மனைவி சுசித்ரா கிருஷ்னா எல்லா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. கல்வியாளர்கள் டாக்டர் பிரதிபா ராய், ஆச்சார்ய வசிஷ்ட திரிபாதி உள்ளிட்ட மூவரும் பத்ம பூஷண் விருதை பெற்றனர்.

பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற சுமித் அந்தில், பிரமோத் பகத், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தமிழகத்தை சேர்ந்த பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, டாக்டர் வீராசாமி சேஷய்யா, புதுச்சேரி தவில் இசைக் கலைஞர் ஏ.வி.முருகையன் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.