ஆறுதலும், ஏமாற்றுமும் கலந்த தமிழக பட்ஜெட் – ம.நீ.ம கருத்து

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் நிதி நிலை அறிக்கைக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பும், விமர்சனமும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட் என விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக அதன் துணை தலைவர் ஆர்.தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசுப் பள்ளி மாணவ மாணவியரின் உயர்கல்வி சார்ந்த உதவித்தொகை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பாராட்டுக்குரியது, குறிப்பாக மாணவியரின் வங்கிக் கணக்குக்கு மாதாமாதம் உதவித் தொகை நேரடியாக சென்று சேரும் என்பது வரவேற்கத் தகுந்த அறிவிப்பு. காலநிலை மாற்றம் சார்ந்த செயல்திட்டங்களுக்காகவும், வெள்ளத் தடுப்பு பணிகளுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதையும், வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் சீரமைப்பு, இருளர் மற்றும் பண்டைய பழங்குடியினருக்கான வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு, சிங்காரச் சென்னை திட்டம், ‘ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தேடல்’ திட்டம் ஆகியவற்றையும் மனமார வரவேற்கிறோம்.

பட்ஜெட்டில் சில நல்ல திட்டங்கள் இருக்கின்றன, ஆனால், அன்றாட வாழ்வில் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க இந்த அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்பதுதான் ஏமாற்றம் அளிக்கும் உண்மை. தேர்தல் நேரத்தில் கவனம் ஈர்ப்பதற்காகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் முக்கிய இடம் பிடித்தவை இப்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

வீட்டிலிருக்கும் மகளிருக்கான உரிமைத்தொகை என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முதலடி கூட எடுத்து வைக்கப்படவில்லை. போலவே, வேளாண் மகளிருக்கான மானியத் திட்டமும் சற்றும் நகராமல் பெயரளவிலேயே நிற்கிறது. உதவித்தொகை பெற அடிப்படைத் தகுதிகள் என்ன, அவ்வடிப்படைத் தகுதிகள் உள்ளோர் யார் என்பதற்கான முதற்கட்ட பட்டியல் தயாரித்தல் போன்ற எந்தச் செயல்பாடுகளும் தொடங்கவில்லை. இவற்றுக்கான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இல்லாத நிலையில், மகளிர் நலனுக்காகச் செயல்படுவதாக இந்த அரசைப் பற்றி எப்படிச் சொல்ல முடியும்?

பெட்ரோல், டீஸல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாதாரண மனிதனின் சுமையைப் பகிர்ந்துகொள்ள அரசு சார்பில் எந்த முன்னெடுப்பும் இல்லாத நிலையில் மக்களுக்கான ஆட்சி என்று எப்படிச் சொல்ல முடியும்? பெட்ரோல் டீஸல் விலைக் குறைப்புக்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவும் சாலைப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தவும் வலியுறுத்துகிறோம்.

மின்சாரக் கட்டணம் மாதாமாதம் கணக்கெடுக்கப்படும், வசூலிக்கப்படும் என்ற வாக்குறுதி எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது? அந்தத் திட்டத்தின் இப்போதைய நிலை என்ன? அது எப்போது செயல்படுத்தப்படும்? கோடை தொடங்கிவிட்ட நிலையில், மின்வெட்டுகளும் தொடங்கிவிட்டன, இவற்றைத் தவிர்க்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இவற்றில் எந்தக் கேள்விக்கும் இந்த பட்ஜெட்டில் பதில் இல்லை. மக்களின் வருமானத்தில் ஒரு முக்கியப் பங்கு மின்சாரக் கட்டணத்துக்கு செலவாகிற நிலையில், இதுகுறித்து மௌனம் சாதிக்கும் அரசை மக்களின் அரசு என்று எப்படிச் சொல்வது?

இலக்கிய விழாக்கள் எடுப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதும் பெரியார் சிந்தனைகள் 21 மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் மகிழ்ச்சி, ஆனால் எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் என்ற அறிவிப்பின் அடுத்த கட்ட நகர்வு என்ன ஆனது? அதுவும் வெறும் அறிவிப்பாக, எழுத்தளவில் மட்டுமே இருக்கிறது.

‘சமூக ஊடகங்களில் தவறான பிரசாரத்தைத் தவிர்க்க’ சமூக ஊடகங்கள் சிறப்பு மையம் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தவறான பிரசாரம்’ என்றால் என்ன? இதற்கான தணிக்கைக் குழுவில் யார் யார் இருப்பார்கள்? கருத்துச் சுதந்திரம் பற்றிய அரசின் நிலைப்பாடு என்ன? இந்த அறிவிப்பின் பின்னணி குறித்தும் நோக்கம் குறித்தும் சந்தேகம் தெரிவிப்பது நம் கடமை.

மக்களைக் கவரும் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவதில் இருந்த தீவிரம் அவற்றைச் செயல்படுத்துகையில் காணாமல் போயிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். கவர்ச்சிகரமான திட்டங்கள் பட்ஜெட்டில் இருக்கலாம், அதே நேரத்தில், அத்தகைய பளபளக்கும் திட்ட அறிவிப்புகளிலும், நகைக் கடன் தள்ளுபடி திட்டச் செயல்பாட்டில் ஏற்பட்ட குளறுபடிகளைப் போல ஊழலும் குளறுபடிகளும் ஏற்படாமல், கவனமாக, முறையாகச் செயல்படுத்துவது அரசின் கடமை என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

இந்த பட்ஜெட்டில் அத்தியாவசியங்களுக்கும் அன்றாடங்களுக்குமான முக்கியத்துவம் மிகக் குறைவாகவே இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பெட்ரோல், டீஸல், சமையல் எரிவாயு, மின்சாரம் போன்ற, மக்கள் அன்றாடம் நுகரும் தேவைகளுக்கான செலவு இன்னமும் உச்சாணிக் கொம்பில்தான் இருக்கிறது. ஒரு சாதாரணக் குடும்பம் தன் வருமானத்துக்குள் நிம்மதியாக வாழும் சூழலை இந்த பட்ஜெட் ஏற்படுத்தவில்லை என்பதை மக்களுக்கு இருக்கும் அதே ஏமாற்றத்துடன் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.