வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் – நா.கார்த்திக்

2022 – 23 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

வேளாண் துறையில் புதுமைகளை புகுத்தி, வேளாண் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் வகையிலும் விவசாயிகளிடையே தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாக கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் 2022-23 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

2022-23 நிதியாண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்சார துறைக்கு 5,000 கோடி ரூபாய் வழங்கப்படும்.

ஈரோடு, சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அச்சு வெல்லம், தூள் வெல்லம் தயாரிக்க முதற்கட்டமாக 100 விவசாயிகளுக்கு ஒரு விவசாயிக்கு 1 லட்சம் என்ற கணக்கில் 1 கோடி ரூபாய் வழங்கப்படும்

தேனி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மொத்த காய்கறி விற்பனை மையங்கள் அமைக்கப்படும். அண்டை மாநில வணிகர்கள் இங்கு நேரடியாக கொள்முதல் செய்ய வசதி ஏற்படுத்தப்படும். கிராமங்களில் வீடுகளுக்கு தென்னங்கன்று வழங்கும் திட்டம் 300 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்.

விவசாயிகள் இடுபொருள்கள் எடுத்துச் செல்லவும், அறுவடையான விளைபொருள்களை எடுத்துச் செல்ல வசதியாகவும் கிராம பஞ்சாயத்துகளில் சாலைகள் அமைக்க 604 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.15 கோடி ஒதுக்கப்படும். புதிய உழவர் சந்தைகளை உருவாக்க 10 கோடி ஒதுக்கப்படும்.

மகளிரின் அன்றாட வருமானத்தை உயர்த்த மல்லிகை, ரோஜா, செவ்வந்தி போன்ற மலர்களின் சாகுபடியை 4,250 ஏக்கரில் மேற்கொள்ள ரூ.5.37 கோடி ஒதுக்கீடு

ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு குறு விவசாயிகளின் பங்கு தொகையை குறைத்து உதவிட நடைமுறையில் உள்ள மானியத்தோடு சேர்த்து 20% கூடுதல் மானியம் வழங்க ஏற்பாடு.

பழங்குடி மற்றும் ஆதி திராவிட விவசாயிகளுக்கு சிறப்பு மானியம் 20 சதவிகிதம் 5 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 5 கோடி ரூபாய் செலவில் 60,000 விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்கப்படும்.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைக் கொண்டு `பயறு பெருக்க சிறப்பு மண்டலம்’ உருவாக்கப்படும். பயிர் காப்பீடு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த 2,339 கோடி ரூபாய் ஒதுக்கீடு

நெல்லின் உற்பத்தித்திறனை அதிகரிக்க குழிதட்டு முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்யும் புதிய தொழில்நுட்பம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அரசு விதைப் பண்ணைகளில் 250 ஏக்கரில் செயல் விளக்கத்திடல் அமைக்கப்படும்.

மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் புதிய திட்டம் நடைமுறை. இதற்கென நடப்பாண்டு 70 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 2500 ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி. திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை ஒருங்கிணைத்து துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் அமைக்கப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும். சிறப்பு ஊக்கத்தொகை உயர்த்துவதால் 1,20,000 விவசாயிகள் பயன்பெறுவர்.

10 குதிரை திறன் வரையிலான சூரிய சக்தியால் இயங்கும் 3,000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் 65 கோடியே 34 லட்ச ரூபாய் நிதியில் வழங்கப்படும். மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிப்பு கூடம், பனை ஏறும் இயந்திரம் வழங்க 75% மானியம்

வேளாண் துறையில் புதுமைகளை புகுத்தி, வேளாண் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் வகையிலும், விவசாயிகளிடையே தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், இளைஞர்கள்,மகளிர், பழங்குடி மற்றும் ஆதி திராவிட விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை அறிவித்ததுடன் , அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்து இந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவித்த தமிழக முதல்வருக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.