மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் – கோவை மேயர் பேட்டி

கோவை மாநகராட்சி முதல் பெண் மேயராக கல்பனா பதவியேற்றார். அவர் முதல் கையெழுத்தாக, வார்டு 26 பீளமேடு, பயணீயர் மில் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு, ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பிடம் கட்டுவதற்காக கோப்பில் கைழுத்திட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கோவை மாநகராட்சி 100 வார்டுகளிலும் தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி, குப்பைகளை அகற்ற, மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எனக்கு இந்த உயரிய பதவியை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாமன்ற உறுப்பினர்கள், கட்சி முன்னோடிகள், தோழமை கட்சிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை மாநகரில் உள்ள பொதுமக்கள் அனைவரையும் நானே நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து அதை நிறைவேற்றுவேன். கோவை மாநகராட்சி அலுவலகத்தில் என்னை எப்போது வேண்டுமானாலும் பொதுமக்கள் சந்திக்கலாம். மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன். தமிழக முதல்வர், அடிப்படை உறுப்பினராக இருந்த என்னை உயரிய பதவியில் அமர வைத்து அழகு பார்த்து உள்ளார். அவர் பெயருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நான் பணியாற்றுவேன்.

மின்சாரத்துறை அமைச்சர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து கோவை மாநகராட்சி மேம்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி, குப்பைகளை அகற்ற செய்தல், மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்துவது, கோவை மாநகரத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.