கீவ் நகரில் உள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

உக்ரைனில் போர் நிலவி வரும் சூழலில், கீவ் நகரில் தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக இன்றே வெளியேறுமாறு கீவில் உள்ள இந்திய தூதரகம் அறியுறுத்தியுள்ளது.

ரஷ்ய விமானப்படை உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது குண்டு வீச்சு நடத்தி வருகிறது. கார்கீவ் நகரத்தையும் ரஷ்யப் படைகள் தொடர்ச்சியாக பீரங்கி, ஏவுகணை மற்றும் வான்வழி குண்டுவீச்சி தாக்கி வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்தநிலையில் உக்ரைனின் கீவ் நகரில் தங்கியுள்ள மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் இன்று அவசரமாக வெளியேறுமாறு அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் இன்று அவசரமாக கீவ் நகரை விட்டு வெளியேறுமாறும், கிடைக்கக்கூடிய ரயில்கள் அல்லது கிடைக்கக்கூடிய வேறு வழிகள் மூலம் வேகமாக அந்த நகரை விட்டு வெளியேறி விடுமாறு அறியுறுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனில் இன்னும் 2,223 தமிழக மாணவர்கள் சிக்கித் தவிப்பதாக மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைனில் அதிகபட்சமாக கார்கிவ் மாநிலத்தில் 728 மாணவர்களும், தலைநகர் கீவில் 352 மாணவர்களும் சிக்கித் தவிப்பதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.