இந்தியர்கள் உக்ரைன் எல்லைகளைக் கடக்க வேண்டாம்: இந்திய தூதரகம் அறிவுரை

ரஷ்ய படைகள் உக்ரைனுக்கு எதிராக தொடர்ந்து மூன்றாவது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. தலைநகர் கீவை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலையில் அங்குள்ள ராணுவ தளத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில், கீவில் உள்ள இந்திய தூதரகம், இந்தியத் தூதரக அதிகாரிகளின் முறையாக வழிகாட்டுதல் இல்லாமல் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எல்லைகளை நோக்கிச் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளது.

போரில் இரண்டு நாட்களாக உக்ரைன் தனித்துப் போராடிய நிலையில், ஸ்வீடன் ராணுவ உதவிகளை செய்வதாக அறிவித்துள்ளது. போரில் உதவி கரம் நீட்ட மாட்டோம் என்று கூறிய அமெரிக்காவும் தற்போது என்ன மாதிரியான உதவிகளைச் செய்யலாம் என ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இந்தியர்கள் சிலரை மீட்க இன்று முதற்கட்டமாக ஏர் இந்தியா விமானம் போலந்து செல்கிறது.

ஆனால், இந்திய மாணவர்கள் உக்ரைனின் கீவ், கார்கிவ், லிவ், டெர்னோபில் போன்ற பல பகுதிகளிலும் சிக்கியுள்ளனர். உக்ரைனின் எல்லைகள் வழியாக நேற்று அண்டை நாடான போலந்து, ருமேனியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை வந்தடையுமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, அவர்கள் தங்களின் கார்களில், கைகளில் இந்திய தேசியக் கொடியைக் கொண்டு வரவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில், உக்ரைனை ஒட்டிய பல
எல்லைகளிலும் பதற்றமான சூழல் நிலவுவதாகவும், அதனால், இந்தியர்களை பத்திரமாக வெளியேற்றும் வழிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிற நாடுகளின் எல்லை வரை இந்தியர்களை பத்திரமாகக் கொண்டு செல்வதில் புதிதாக சவால்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தூதரக அதிகாரிகளிடமிருந்து வழிகாட்டுதல்கள் வராமல் எக்காரணம் கொண்டும் எல்லை நோக்கிய பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அறியுறுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனின் மேற்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ளவர்கள் உணவு, தண்ணீர் வசதியுடன் உறைவிடத்திலேயே இருப்பது மிகவும் பாதுகாப்பானது. எல்லைகளை இந்தச் சூழலில் அடைய முயற்சி செய்ய வேண்டாம்.