பெரியார் இல்லை என்றால் திமுக ஆட்சி இல்லை – முதல்வர் ஸ்டாலின்

மூத்த பத்திரிகையாளரும், கலைஞர் செய்திகள் செய்திப்பிரிவு தலைவருமான ப.திருமாவேலன் எழுதிய “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?” இரண்டு தொகுதிகள் அடங்கிய நூலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வெள்ளிக்கிழமை அன்று (25.02.2022) நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

 

(படம்:கலைஞர் செய்திகள்)

“இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?” நூலின் சுருக்கம்:

“பெரியார் ஆரியம் விலக்கிய தமிழையே விரும்பினார்! அவர் முன்வைத்த சமூகநீதித் தத்துவம் என்பது தமிழர்கள் அதிகாரம் பெற்ற உன்னதமான இடத்தை அடைவதையே நோக்கமாகக் கொண்டது! அவர் கேட்ட தமிழ்நாடு என்பது தன்னிறைவு பெற்ற முழுமையான தமிழ்த் தேசமே!

ஆனால், இன்று அவர் சிலரால் துரோகியாக அடையாளம் காட்டப்படுகிறார். யாருக்கும் எவருக்கும் துரோகம் செய்து வாழ வேண்டிய வாழ்க்கை முறை அவருக்கு இல்லை. அவரை விமர்சிப்பவர்களுக்கு வேண்டுமானால் அத்தகைய சூழல் இருக்கலாம்! அவர் குறித்த அறியாமையால் சில தமிழ்ப் போலிகள் தமிழ்க் களத்தை நாசம் செய்து வருகிறார்கள்.

அந்த அவதூறுகளுக்கான பதிலே இது! அவர் குறித்த வரலாறு மட்டுமல்ல. அவரைச் சுற்றிலும் 100 ஆண்டுகால அரசியல் இலக்கியக் களங்களின் வரலாறு! அவரோடு சேர்த்து தமிழறிஞர் அனைவரையும் நீங்கள் அறியலாம்! சிறியர் கிளப்பிய அவதூறுகளின் மூலமாக உண்மைப் பெரியாரை உணர்த்துகிறது இந்த நூல்” (கலைஞர் செய்திகள்)

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: தியாக வரலாறான நம் கடந்த காலத்தை எடுத்துச் சொல்ல இன்றைய திரிபுவாதிகளுக்குப் பதில் சொல்ல வாளும் கேடயமுமான ஒரு நூலே இது.

பல்கலைக்கழகங்களில் பாடத் திட்டமாக வைக்கக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய ஆய்வுஏடாக திகழ்கிறது இந்நூல். பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை பத்திரிகையாளர் திருமாவேலன் செய்திருக்கிறார்.

ஒளிவு மறைவில்லாமல் தன் கருத்துகளை எடுத்துரைத்ததற்காகக் கடுமையான விமர்சனங்களை தந்தை பெரியார் எதிர்கொண்டவர். அவர் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசும்போது எதிரிகள் கல் வீசினார்கள். செருப்பு வீசினார்கள். பாம்பைக் கொண்டு வந்து வீசினார்கள். சாணி அடித்தார்கள். ஏன், மனித மலத்தைக் கூட வீசினார்கள். அத்தனையையும் எதிர்கொண்டு, அஞ்சாமல் தன் கருத்துகளை எடுத்துரைத்தவர் தந்தை பெரியார்.

100 ஆண்டு காலமாக கல்வி மறுக்கப்பட்ட தமிழ் இனத்துக்கு கல்வியை கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது. இது பெரியார் மண். தமிழ் இனத்தின் நேரடி எதிரிகளை அடையாளம் கண்டுகொள்ள முடிவதோடு, மறைமுக எதிரிகளை கண்டுபிடித்துவிட முடியும் என தெரிவித்தார்.

அனைவருக்கும் முக்கியத்துவம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. திராவிடம் என்றால் சமூக நீதி. 95 வயதிலும் தமிழர்களுக்காக அரும்பாடுபட்டார் பெரியார். அவர் இல்லை என்றால் திமுக ஆட்சி இல்லை என முதல்வர் ஸ்டாலின் உருக்கத்துடன் பேசினார்.