நீட் தேர்வினால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படவில்லை – வானதி எம்.எல்.ஏ

நீட் தேர்வினால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படவில்லை என்றும் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் நீட் தேர்வினால் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை எனவும் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக அனைத்து கட்சிகள் ஆலோசனை சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, பாஜக, மதிமுக உள்ளிட்ட 13 கட்சிகள் பங்கேற்றன.

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு வலியுறுத்தினோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாநில உரிமையும் சட்டமன்றத்தின் அதிகாரமும் கேள்வி குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறினார்.

மேலும் அனைத்து கட்சி கூட்டத்தில் நீட் விலக்கு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார்.

 செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறுகையில்: பேரவையில் நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை கொண்டுவரப்பட்ட போது பாஜகவின் கருத்தை முழுமையாக கேட்கவில்லை. மத்திய அரசு மாநிலங்கள் மீது நீட் தேர்வை திணித்திருப்பதாக தீர்மானத்தில் உள்ளது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே நாடு முழுதும் நீட்தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர் நீட் தேர்வினால் சமூக நீதிக்கும், கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார். நீட் தேர்வு 10 மொழிகளில் நடைபெறுவதால் பல மாநில மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் எனப் பேசினார்.

சமூக நீதிக்கு நீட் தேர்வு எதிராக இருப்பதாக குறிப்பிடுகிறர்கள். சமூக நீதி என்பது இட ஒதுக்கீடு சரியான முறையில் அமல்படுத்தப் படுவதுதான். நீட் தேர்வினால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுக்கு பேசினார். மேலும், கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு எதிராக நீட் இருப்பதாக தொடர்ந்து குற்றசாட்டு முன்வைக்கப்படுகிறது. நீட் தேர்வால் எள் முனையளவுக்கு கூட பாதிப்பில்லை எனத் தெரிவித்தார்.

நீட் தேர்வினால் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை எனவும் அவர்களுக்குரிய மருத்துவ இடங்களை அவர்களே பெற்று வருகின்றனர் என்றும் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு இருப்பதால் கூடுதல் மருத்துவ இடங்கள் மூலம் மருத்துவ படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும். தமிழக மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக நல்ல முறையில் நீட் தேர்வு எழுதி கடந்த வருடம் தேசிய சராசரியை விட அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.