கோவையில் சிறப்பு தூய்மைப் பணியை துவக்கி வைத்த அமைச்சர்

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் சிறப்பு தூய்மைப் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களிலும் மண்டலத்திற்கு 20 தூய்மைப் பணியாளர்கள், 20 கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொண்ட சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு தினமும் ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள மூன்று இடங்களை கண்டறிந்து சாக்கடையை சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல், மரக் கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

மேலும் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசுக்களை அழிக்கும் பணிகளையும், கொசு மருந்து தெளித்தல், குப்பைகளை சேகரிக்க 5 தள்ளு வண்டிகள், குப்பைகளை சேகரிக்கும் தொட்டிகள், புகை மருந்து அடித்தல் போன்ற சிறப்பு தூய்மை பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை புல்லு காடு பகுதியில் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை ஆணையாளர் சர்மிளா, தெற்கு மண்டல உதவி ஆணையாளர் அண்ணாதுரை, நகர் நல அலுவலர் சதீஷ் குமார், ஸ்மார்ட் சிட்டி அலுவலர் மகேஷ் கனகராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.