பசுமைப் பரப்பு பெருகட்டும்!

தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்துள்ள பசுமைத் திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதே நேரத்தில் இந்த திட்டம் வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல் நடைமுறையில் ச‌ரியாகத் செயல்படுத்தப்பட வேண்டும். இது ஒரு அழகியல் ரீதியான மரம் நடும் விழா அல்ல. பசுமைப் போர்வை வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒன்றாக இருக்கக் கூடாது. ஏனென்றால் உலக நாடுகள் ஒன்று கூடி பருவநிலை மாற்றம் குறித்து பேசி முடிவுகள் எடுத்து வரும் தருணம் இது. பருவநிலை மாற்றத்துக்கும், பசுமை பரப்புக்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் புரியும் வகையில் பசுமை திட்டம் அமைய வேண்டும்.

தமிழகத்தில் சூழலியலாளர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் பசுமை பரப்பை அதிகரிக்க போவதாக தமிழக அரசு அறிவித்து இருப்பதை அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள். மேலும் இச்செயல் திட்டத்தில் விவசாயத் துறை, வனத் துறை, வருவாய்த்துறை மற்றும் பஞ்சாயத்து போன்ற துறைகள் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை தனியாக வனமகோத்சவம் என்ற பெயரில் மரம் நடும் விழாவை நடத்துவது, நாற்றுப் பண்ணைகள் வைப்பது, நாற்றுக்களை விநியோகம் செய்வது, திட்ட அறிக்கைகள் தயாரிப்பது என்று தனியாக இயங்கிக் கொண்டிருக்கும். மற்ற துறைகளுக்கும் இதற்கும் பெரிய தொடர்பு இருக்காது. பொதுமக்களுக்கும் விவ சாயிகள் போன்றவர்களுக்கும் இதற்கும் பெரிய ஒருங்கிணைப்பு இருக்காது. ஆனால் இந்த முறை அனைத்துத் துறைகளையும் இணைத்து இந்த திட்டம் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.

மேலும் இந்த பசுமை மயமாக்கல் என்பது புதிதாக வனத்தை உருவாக்குவது அல்ல. தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிப்பது என்பதை தெளிவாக அரசு அறிவித்துள்ளது. அதைப்போலவே எங்கு மரம் நட வேண்டும், பசுமை பரப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்கு வனத்துறையிடம் உள்ள இடம் மட்டுமல்லாது, அரசாங்க இடம் என்பதோடு நின்றுவிடாமல் தனியார் தோட்டங்கள், தரிசு நிலங்கள், நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்கள், பஞ்சாயத்து குளங்கள் என்று வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தேர்வு செய்து அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியது.

இதில் இன்னொரு அம்சம் என்னவென்றால் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்கு, உள்நாட்டு மர வகைகளை தேர்வு செய்து நடவு செய்ய இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. தற்போது இங்கு உள்ள மர வகைகளை போலல்லாமல் சந்தனம், கருங்காலி, தேக்கு மரம், புங்கம், புளி போன்ற உள்ளூர் வகைகளோடு விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பயிரிட்டு வருமானம் பெறும் வகையில் வணிக ரீதியாக மதிப்பு வாய்ந்த சவுக்கு, தீக்குச்சி மரம், மலைவேம்பு போன்றவற்றையும் நடவு செய்ய உள்ளதாக கூறியுள்ளார்கள்.

அரசாங்கம் கவனிக்க வேண்டிய குறிப்பிடத்தக்க ஒரு அம்சமும் உண்டு. ஏனென்றால் மற்ற எந்த துறையினரையும் விட இந்த பசுமைப் பரப்பை அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்ற போவது விவசாயிகள். அந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டம் அமைய வேண்டும். வணிக ரீதியாக மதிப்பு வாய்ந்தது என்று சொல்லும்பொழுது அதற்கான விலையைப் பெறுவதற்காக விவசாயிகள் படாதபாடு படவேண்டி இருக்கிறது. ஏராளமான சட்டதிட்டங்கள், வனத்துறை அனுமதி உள்ளிட்ட பலவற்றை பெற்று இதை செய்யும் பொழுது விவசாயிகள் களைத்துப் போய் விடுகிறார்கள். சட்ட நடைமுறை நல்ல முறையில் இருந்தால் தான் இத்திட்டம் பெருமளவு பயன் தரக்கூடியதாக அமையும்.

இது வனப் பரப்பை அதிகரிப்பது அல்ல, தமிழகத்தில் உள்ள பசுமைப் பரப்பை அதிகரிப்பது. இதற்கு முக்கிய பங்காற்ற வேண்டியது அரசாங்கமும் விவசாயிகளும் தான். ஒத்துழைக்க வேண்டியது மற்ற துறைகளும், பொதுமக்களும் ஆவர்.