சின்ன வெங்காயத்தின் விலை உயரும் -தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் மூன்றாவது முன் கூட்டிய மதிப்பீட்டின் படி, 2019 – 20 ஆண்டில், தமிழகத்தில் சின்ன வெங்காயம் 0.28 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.55 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளில் அதிகளவு சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.

தமிழ்நாட்டில், மொத்த வெங்காய பரப்பளவில் 90 சதவீதத்திற்கும் மேல் சின்ன வெங்காயமும் மீதம் பெல்லாரி வெங்காயமும் பயிரிடப்படுகின்றன. திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் நாமக்கல், ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயத்தை அதிகளவு பயிரிடுகின்றனர். வர்த்தக மூலங்களின் படி, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் பருவமழை காரணமாக பயிர் சேதமடைந்ததால் வெங்காயத்தின் வரத்து தமிழ்நாட்டு சந்தையில் குறைந்துள்ளது.

மேலும், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் தமிழ்நாட்டில் விதைக்கப்பட்ட பயிர்கள் பருவ மழையினால் பாதிக்கப்பட்டதால் விளைந்த மற்றும் சேமித்து வைக்கப்பட்ட வெங்காயமும் பெருமளவு அழிந்துவிட்டன. இதனால், சின்ன வெங்காயத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. கர்நாடகாவிலிருந்து புதிய வரத்து வந்தால் மட்டுமே விலை குறைய ஆரம்பிக்கலாம்.

சின்ன வெங்காயத்தின் அளவின் அடிப்படையில் மூன்று தரமாக பிரிக்கப்படுகிறது. முதல் தரம் 27 மி.மீ, இரண்டாவது தரம் 23 மி.மீ மற்றும் 18 மி.மீ மூன்றாவது தரமாகும், கடைசி தரம் விதைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. முதல் தரமான வெங்காயத்தின் பண்ணை விலை வரும் வாரங்களில் கிலோவிற்கு ரூ. 75 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில் வெங்காயத்தின் விலை ஜனவரி 2022 வரை உயரும், அதன் பிறகு நிலையானதாக இருக்கும். என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.