பஞ்சு மிட்டாய் தினம் பற்றி அறிவீர்களா?

இன்றைய நாளில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு பெயர் வைத்து பல தினங்களை கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் நமக்கெல்லாம் பிடித்த பஞ்சு மிட்டாய்க்கென ‘பஞ்சு மிட்டாய் தினம்’  என்று தனியாக ஒரு தினம் உள்ளது. ஆச்சிரியமாக இருக்கிறதா? இதற்கு கூட தினமா என்ற கேள்வி எழலாம்.

ஆரம்ப காலகட்டத்தில் பஞ்சு மிட்டாய் உருவாக்கம் கைமுறையாக தான் இருந்தது. 1897- ல் பல் மருத்துவர் வில்லியம் மோரிசன் மற்றும் மிட்டாய் வியாபாரி ஜான் சிவார்டன் இணைந்து சுழழும் பஞ்சு மிட்டாய் இயந்திரத்தை உருவாக்கினர். பின் 1904 -ல் அவை உலகுக்கு அறிமுகமாகிறது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக் கூடிய ஒன்று பஞ்சு மிட்டாய். பஞ்சு மிட்டாய் காரரின் மணி சத்தம் கேட்டதும் வாசலில் நின்று பார்த்து அதை அடம்பிடித்து நம்மில் பலர்  வாங்கி இருப்போம். நாவில் பட்டதும் பட்டென கரையக்கூடிய அந்த ரோஸ் மேகத்தின் மீதுள்ள மோகம், இன்றும் பஞ்சு மிட்டாய் காரரை கண்டால் பழைய நினைவலைகளுக்கு கூட்டிச் செல்லும். முன்பெல்லாம் திருவிழா, பொருட்காட்சி, பூங்கா என நம் கண்களில் அடிக்கடி தென்பட்டு விடும். இப்பொழுது அந்த மணி சத்தம் கேட்பதே அரிதாகி விட்டது.

பஞ்சு மிட்டாய் போன்று பிரபலமாக இருந்த பல திண்பண்டங்களின் சுவடு காலப்போக்கில் மாறி, வேறு வகையான சாக்லெட்கள் வந்து விட்டன. இன்றைய குழந்தைகளுக்கு பெரும்பாலும் அவை தெரிந்திருப்பதில்லை.

90 ‘ S குழந்தைகள் என்று நாம் கூறும் இன்றைய இளைஞர்களின் சிறு பிராயத்தில் பஞ்சு மிட்டாய், ஜவ்வு மிட்டாய், பெப்சி ஜூஸ், கயிறு மிட்டாய், தேன் மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய் என இந்த வரிசையில் அடங்கும் பல விதமான பொருட்களை அவர்கள் நிச்சயம் சுவைத்து இருப்பார்கள். இன்று இந்தப் பொருட்கள் அரிதாகிவிட்டாலும் அவற்றிற்கும், நமக்குமான நினைவுகள் என்றுமே மாறுவதில்லை.

அதே போல, காலப்போக்கில் நாம் கண்டு மகிழ்ந்த சிறு சிறு விஷயங்கள் இன்று மாற்றம் அடைந்திருந்தாலும், அவை நமக்குள் ஏற்படுத்திய தாக்கம் மாறுவதில்லை.