உலக சாதனைகள் நிகழ்த்தும் 15 குழந்தைகள்!

கோவையில் 15 குழந்தைகள் 12 மணி நேரத்தில் வெவ்வேறு விதமான தனிநபர் உலக சாதனைகளை நிகழ்த்த உள்ளனர்.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது லிட்டில் இண்டிகோ கிட்ஸ் அகாடமியின் இணை நிர்வாக இயக்குனர் முத்துக்குமார் மற்றும் நிர்வாக இயக்குனர் சுகாசினி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது: கோவை சாய்பாபா காலனியில் எங்களது அகாடமி கடந்த 9 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. தற்போது 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்தக் குழந்தைகளுக்கு கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக 15 வெவ்வேறு தலைப்புகளின் கீழ் இரண்டு வயது முதல் 10 வயதுடைய குழந்தைகள் தனிநபர் சாதனைகளை நிகழ்த்த உள்ளனர். சாய்பாபா காலனியில் வரும் 6ஆம் தேதி இந்த சாதனை நிகழ்ச்சி தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற உள்ளது. எலைட் புக் ஆஃப் ரெக்கார்ட்ய், ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்டு, தமிழன் புக் ஆஃப் ரெக்கார்டு, இந்தியன் ரெக்கார்ட் உள்ளிட்ட 4 சாதனை புத்தகங்களில் இடம்பெறும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொள்கிறார். குழந்தைகள் வளர்வதில் முதல் 2 ஆயிரம் நாட்கள் அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள் முகவும் முக்கியமானவை. இந்த காலகட்டத்தில் குழந்தைகள் கற்றுக் கொள்வது அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களது நினைவில் இருக்கும். எனவே இந்த காலத்தில் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும், வெவ்வேறு திறன்களை மேம்படுத்தவும் எங்கள் நிறுவனம் பயிற்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.