ஜனவரி 2ம் தேதி துவங்குகிறது கோவை விழா..!

கோவை மாவட்டம் சாா்பில் நடத்தப்படும் கோயம்புத்தூர் விழா நிகழ்ச்சிகள் ஜனவரி 2 ம் தேதி தொடங்கி ஜனவரி 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா கோவை வாலாங்குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா விழாவினை தொடங்கி வைத்தனர்.

கோவை மக்களின் கலாச்சாரம், பாரம்பரியம், மற்றும் சமூக உணர்வின் அடையாளங்கள் இக்கொண்டாட்டத்தின் வழியே போற்றப்படுகிறது.

கோவை மாவட்டம் உருவாகிய தினத்தைக் கொண்டாடும் விதமாக கோவை மாநகராட்சி சாா்பில் ஆண்டுதோறும் ‘கோயம்புத்தூர் விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது. 8 நாள்கள் நடக்கும் இந்த விழாவில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள், மாரத்தான், இசை மழை உணவுத் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.