நீட் விலக்கு சட்ட முன்வடிவு: ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை, குடியரசுத் தலைவருக்கு உடனடியாக அனுப்பி வைக்க, ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து, முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வால் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆராய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவானது 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில், சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி, நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட முன்வடிவு தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. எனினும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக இந்த சட்ட முன்வடிவு அனுப்பப்படாமல் உள்ளது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார்.

அப்போது, மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைந்து பெறும் நோக்கில், நீட் விலக்கு சட்டமுன்வடிவை, குடியரசுத் தலைவருக்கு உடனடியாக அனுப்ப ஆளுநரிடம் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உடன் இருந்தனர்.

 

Source: News 18 Tamilnadu