ஊழல் தடுப்பில் புதிய தணிக்கைப் பிரிவை தொடங்க திட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின்  

பொருளாதார குற்றப்பிரிவு, ஊழல் தடுப்பு பிரிவில் நிதி நிறுவனங்கள் செய்யும் மோசடியை தடுக்க புதிய தணிக்கைப் பிரிவை தமிழக அரசு தொடங்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் ஆறு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் மண்டல மாநாடு கோவையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். 500க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணையவாயிலாகவும் கலந்து கொண்டுள்ளனர்.

இம்மாநாட்டின் சிறப்பு விருந்தினராக தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காணொளி வாயிலாக கலந்து கொண்டார். இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் நிஹார் ஜம்புசாரியா, இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் தென் மண்டல தலைவர் ஜலபதி, ஐ.சி.ஏ.ஐ முன்னாள் தலைவர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டை தொடங்கி வைத்தப் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

53வது மண்டல கருத்தரங்கில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. தென் மண்டல கவுன்சில் வரலாற்றில் முதல்முறையாக 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தார். மழை வெள்ளப் பாதிப்பு நிவாரணப் பணிகளால் இந்த கருத்தரங்கில் காணொளி காட்சி மூலம் பங்கேற்றுள்ளேன்.

நிதித்துறை, கணக்கு தணிக்கையோடு உங்கள் பணி நின்றுவிடாது. நாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி வருகிறீர்கள். பொருளாதாரத்தை வடிவமைப்பதில் பட்டய கணக்காளர்கள் பெரும்பங்காற்றி வருகிறார்கள்.

பொருளாதார குற்றப்பிரிவு, ஊழல் தடுப்பு பிரிவில் நிதி நிறுவனங்கள் செய்யும் மோசடியை தடுக்க புதிய தணிக்கைப் பிரிவை தமிழக அரசு தொடங்க உள்ளது. இதில் முக்கிய ஆலோசனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உடனடியாக செயல்படுத்துவோம். பட்டய கணக்காளர்கள் வெறும் கண்காணிப்பாளராக அல்லாமல், பொருளாதார பாதுகாப்பாளராக உள்ளீர்கள் எனக் கூறி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.