தேடலும் திட்டமிடுதலும் அவசியம் – கவிதாசன்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில், சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற பன்மொழி பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

இணைய வழியில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் பாரதியார் பல்கலைகழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இருந்து 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் அறக்கட்டளையின் நிறுவனரும் ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் தலைவருமான கவிதாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அவர்தம் உரையில், “தன்னம்பிக்கை ஒருவனை உயர்த்தும் என்றும் ஓர் உயர்ந்த இலக்கை அடைவதற்குத் தேடலும் திட்டமிடுதலும் அவசியம் என்றும் குறிப்பிட்டார். மேலும், வாய்ப்புகளைத் தேடி அலையாமல் வாய்ப்புகளை உருவாக்கும் இளைய சமுதாயம் உருவாக வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இவ்விழாவில் பாரதியார் பல்கலைகழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் சித்ரா வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் லச்சுமண சாமி தலைமையுரை ஆற்றினார்.