நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவி: கொண்டாடும் ஊர் மக்கள்

கோவையைச் சேர்ந்த பழங்குடியின மாணவி நீட் தேர்வில் 202 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பனூர் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கீதா.

மலசர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்த மாணவிக்கு சாதி சான்றிதழ் உட்பட எந்த ஆவணங்களும் இல்லாததால் அவதியுற்று வந்தார். இது குறித்து பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த கிராமத்திற்கு பல்வேறு அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்தது.

மேலும் சங்கீதாவுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனிடையே மாணவி மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

சங்கீதாவிற்கு சில தொண்டு நிறுவனங்களும் உதவி செய்ய முன் வந்தனர். இந்த நிலையில் மாணவி நீட் தேர்வில் 202 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்தப் பழங்குடியினர் கிராமத்தில் முதல்முறையாக மாணவி ஒருவர் மருத்துவ படிப்பை படிக்கச் செல்வது அந்த ஊர் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.