திராவிடன் அறக்கட்டளை சார்பில் நேரு நகரில் இ-சேவை மையம் தொடக்கம்

திராவிடன் அறக்கட்டளை சார்பாக நேரு நகர் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கென இலவச இ-சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், தாலுகா அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில், சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றுகளுக்கு விண்ணப்பிக்கும், ‘பொது இ – சேவை’ மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

வருமானம், சாதி, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ் பெற விரும்புவோர், நேரடியாக பயன்பெறும் வகையில், நேரு நகர் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் நலன் கருதி கோவை திராவிடன் அறக்கட்டளை சார்பாக இலவச இ-சேவை மையம் காளப்பட்டி சாலையில் நேரு நகர் பகுதியில் தொடங்கப்பட்டது.

இதற்கான தொடக்க விழா, திராவிடன் அறக்கட்டளைத் தலைவர் கோவை பாபு தலைமையில் நடைபெற்றது. இதில், வி. பி. கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக,தி.மு.க.கோவை மாநகர் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் பையா ஆர். கிருஷ்ணன் கலந்துகொண்டு இ சேவை மையப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, டேன்ஜரஸ் பாய்ஸ் கிரிக்கெட் கிளப் மாணவர்களுக்கு கிரிக்கெட் கிட் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் சி. வெண்மணி, திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் நேருதாஸ், திமுக பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ரகுபதி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மாலதி, பகுதிக்கழகச் செயலாளர் பொன்னுசாமி, 35 வது வட்டக்கழகச் செயலாளர் குணசேகரன், லோகநாதன், எஸ்.பி காலனி சக்தி உட்பட, காளப்பட்டி பகுதிக்கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.