முதல்வருக்கு ‘முத்தலை வேல்’ வழங்கிய சேலம் பூசாரிகள் நலச் சங்கம்

ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாள்களுக்குள் கோவில் பூசாரிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சாதனை படைத்து வரும் முதல்வரைப் பாராட்டி நன்றி தெரிவிக்கும் விதமாக சேலத்தை தலைமை இடமாகக் கொண்ட கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் முதல்வருக்கு முத்தலை வேல் (திரிசூலம்) வழங்கப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இந்த திரிசூலத்தை சேலத்தை தலைமை இடமாகக் கொண்ட கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் வாசு பூசாரி வழங்கினார்.

மேலும் வாழ்த்து மடலும் தமிழர் இலக்கிய வரலாறு மற்றும் இந்தியத் திருவிழாக்கள் ஆகிய நூல்களையும் முதல்வரிடம் வழங்கப்பட்டது. இந்தச் சந்திப்பின்போது பூசாரியின் குரல் ஆசிரியர் புருஷோத்தமன் மற்றும் பொருளாளர் குணசேகரன் ஐயர் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் இதுகுறித்த பத்திரிக்கை செய்தியில்: முதல்வர் மு. க. ஸ்டாலின் கடந்த 100 நாள்களில் பல்வேறு கோவில்களுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்களும் சொத்துக்களும் வணிக வளாகங்களும் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றன.

தனியார்கள் வசம் பல்லாண்டுகளாக மிகக் குறைந்த வாடகைக்கு இருந்து வந்த பலகோடி மதிப்புள்ள சொத்துக்கள் நீதிமன்ற உத்தரவுகள் மூலம் மீட்கப்பட்டு திருக்கோவில் வசம் கொண்டுவரப்பட்டுள்ளன.

தமிழக முதல்வர் நல்லாட்சியில் கோவில் பூசாரிகளின் எண்ணற்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.